தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா நட்சத்திர தம்பதியாக உள்ளனர். இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். சூர்யா ஜோதிகாவுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் திருமண நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கின்றனர்.
நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் சமீபத்தில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தொடர்ந்து வருகிற 14ம் தேதி சூர்யா மமிதா பைஷூ நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா தங்களது குடும்பம் குறித்தும் பிள்ளைகள் குறித்தும் பல உணர்வுகளை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தினார்கள்.
அந்த நேர்காணலில் நடிகர் சூர்யா கூறியதாவது, நாங்கள் வீட்டில் திரைப்படங்களைப் பற்றி பேசுவதில்லை. எங்கள் குழந்தைகளுக்கு அதில் ஆர்வமே இல்லை. யாராவது புகைப்படம் எடுத்தால் கூட சங்கடப்படுவார்கள். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் ரொம்ப தெளிவான குழந்தைகள் என்று நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார்.
தொடர்ந்து நடிகை ஜோதிகா கூறியதாவது, சூர்யாவின் குடும்பம் மிகவும் பாரம்பரியமானது. ஒரு அருமையான குடும்பம். அவர்கள் எப்போதும் உதவிகள் செய்து வருபவர்கள். குழந்தைகள் அதை பார்த்தே வளர்ந்திருக்கிறார்கள். சென்னைக்கே உரிய அந்த எளிமையை பார்த்து அவர்கள் வளர்ந்தார்கள்.
நாங்கள் மும்பைக்கு வந்த போதும் மும்பை அவர்களுக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. அங்குள்ள சூழல் புதிய நபர்களை சந்திப்பது எல்லாம் அவர்களுக்கு பிடித்திருந்தது. அவர்கள் தங்களுக்கான நல்ல நண்பர்களையும் சரியாக தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். எங்களது மகள் தியா ஒரு ஆவணப் படத்தை எடுத்திருந்தார். ஆனால் அவருக்கு திரைத்துறையில் ஆர்வம் இல்லை.
அவர் அமெரிக்காவில் கல்லூரியில் சேர்வதற்காக புரொஃலை் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்த ஆவணப் படத்துக்கான முழு படப்பிடிப்பையும் அவரே தனியாக செய்து முடித்தார். கேமரா கருவிகளை கொண்டு செல்ல எங்களுடைய கார் மட்டும்தான் எங்களிடம் அவர் கேட்டார். பிறகு அனைத்தையும் அவரே திட்டமிட்டு செய்தார். இது எங்களுக்கு ரொம்பவே பெருமையாக இருந்தது என்று ஜோதிகா அப்போது கூறியிருக்கிறார்.





