கோமாளி வேஷம் போட்டால் குதித்துதானே ஆக வேண்டும், குரங்குக்கு வாழ்க்கை பட்டால் மரத்துக்கு மரம் தாவத்தானே வேண்டும் என்றெல்லாம் சில பழமொழிகள் சொல்வார்கள். அதுபோல், சினிமாவில் நடிக்க வந்துவிட்டால் எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் நடித்துதான் ஆக வேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு.
ஆனால் சில நடிகர்கள், நடிகைகள் குறிப்பிட்ட வேடங்களில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர். அதுபோன்ற கேரக்டர்களில் நடிப்பதால் அவர்களது பர்சனல் இமேஜ் பாதிக்கப்படும் என்றும் கருதுகின்றனர். அதனால் பல கோடி ரூபாய் சம்பளத்தை காட்டிலும், தங்களது சுயமரியாதை முக்கியம் என்றும் நினைக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரமாக 1980, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ரஜினி, கமல் இருவருக்கும் நிறைய படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நிறைய நடித்தார். இந்தி நடிகர் அனில் கபூரின் அண்ணன் போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என 2 மகள்கள் உள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவி மறைந்த நிலையில், அவரது மகள் ஜான்வி கபூர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அம்மாவை போலவே பிஸியான நடிகையாக மாறியிருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டில் இந்தியில் வெளியான தடக் படத்தில் அறிமுகமான ஜான்வி கபூர் தொடர்ந்து ரோகி, குட்லக், ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவாரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஜான்வி கபூர் கூறியதாவது, நான் நடிக்கும் படங்களில், அந்த கேரக்டருக்காக எவ்வளவு கஷ்டப்படுவதற்கும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் தலையில் மொட்டை அடித்துக்கொண்டு எந்த கேரக்டரிலும் நடிக்கவே மாட்டேன். அப்படி நடிக்கும் கேரக்டருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்றாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
அதற்கு காரணம், என்னுடைய நீண்ட கூந்தலுக்காக என் அம்மா ஸ்ரீதேவி நிறைய அக்கறை எடுத்துக்கொண்டார். 4 நாட்களுக்கு ஒருமுறை என் தலைமுடிக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்து விடுவார். என் தலைமுடியை பராமரிக்க அவர் அதிக கவனம், அக்கறை எடுத்துக்கொண்டார். நான் முதல் படத்தில் நடிக்கும்போது, தலைமுடியை சிறிது வெட்டியதற்காக அவர் கோபப்பட்டார். அதனால் என் அம்மாவை போலவே என் தலைமுடியை பராமரிப்பதில் நான் அதிக அக்கறை காட்டி வருகிறேன், என்று சென்டிமென்ட்டாக கூறியிருக்கிறார் நடிகை ஜான்வி கபூர்.





