தமிழகத்தின் முதல்வராக உள்ள விஜய் பதவியேற்று 3 மாதங்கள் கடந்துள்ளது. இந்த நிலையில் அவர் வழக்கமான முதல்வர் அறைக்கு பதிலாக தலைமை செயலகத்தின் வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10வது தளத்துக்கு தனது முதல்வர் அறையை இடமாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கான முதல்வர் விஜயின் அறை பல நவீனமயமான வசதிகளுடன் 10வது தளத்தில் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ. 5.58 கோடி ரூபாய்க்கான டென்டர் விடப்பட்டுள்ளது. விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வழக்கமாக முதல்வர் அமரும் இருக்கையை மாற்றிவிட்டு சோபா போன்ற ரோலிங் சேரில் அமர்ந்து பணிபுரிந்து வருகிறார்.
இப்போது விஜய் தனக்கான முதல்வர் அறையை மாற்றுவதும் 5.58 கோடி ரூபாய் செலவில் அவருக்காக புதிய அறை உருவாக்கப்படுவதும் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்று அதிமுக சார்பில் நடந்த விவசாயிகள் பங்கேற்ற ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, இங்கே விவசாயிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று ஆடம்பரமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் தனது அறையை மாத்திக்கொண்டு இருக்கிறார். நாட்டில் எவ்வளவு பிரச்னை இருக்கிறது? நவீன அறை வேண்டுமாம். ஏன் அதில் இருக்கிற ரூம் பத்தாதா?
அந்த அறையில் பேரறிஞர் அண்ணா இருந்தார். நமக்கு எதிரியாக இருந்தாலும் கலைஞர் அதில் இருந்தார். பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அதில் அமர்ந்திருந்தார். அதற்கு பிறகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அங்கே இருந்தார்கள். அதற்கு பிறகு மக்களின் அன்பால் அந்த அறையில் நானும் முதல்வராக அமர்ந்து பணியாற்றினேன்.
அதற்கு பிறகு ஸ்டாலின் அங்கு முதல்வராக பணியாற்றினார். இத்தனை முதலமைச்சர்களும் அந்த அறையில் இருந்துக்கொண்டு பல்வேறு திட்டங்களை தீட்டி மக்களுக்கு வழங்கினோம். ஆனால் விஜய்க்கு அறைதான் முக்கியம். மக்கள் முக்கியமில்லை. அவருக்கு அறை நவீன வசதியாக இருக்கணுமாம். இங்கு இருக்கிற விவசாயிகள் சோத்துக்கு வழியின்றி திண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனா அவருக்கு ரூம் வசதி பத்தலே. ஏன்னா ஒரு நடிகர் அவர் அப்படித்தான் இருப்பார். எல்லாம் தலைவிதி தலை எழுத்து என்ன பண்றது? என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.





