இயக்குநர் அமீர் குறித்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவதூறாக, அவமதிக்கும் விதமாக பேசியது தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அமீர் போன்ற சிறந்த படங்களை தந்த இயக்குநரை மிகவும் தரக்குறைவாக அவர் பேசியது, பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயத்தில் முதலில் நடந்த உண்மையை முதலில் சொல்ல முன்வந்தது இயக்குநரும், நடிகருமான சசிக்குமார்தான். அவர்தான் பருத்திவீரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு செலவுக்கான முழுத்தொகையை கடனாக கொடுத்தேன் என்று சொன்னார். இதையடுத்து, இயக்குநர் சமுத்திரக்கனியும் 50, 60 பேரிடம் அமீர் கடன் வாங்கி, கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்து முடித்தார் என்றும் பதிவிட்டார்.
இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் குறித்து அவதூறாக பேசியதை இயக்குநர், நடிகர் பொன்வண்ணன், இயக்குநர் கரு பழனியப்பன், கவிஞர் சிநேகன் என பலரும், தங்களது எதிர்ப்பை, கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஒரு படைப்பாளியான அமீர் குறித்து விமர்சிக்க, ஞானவேல் ராஜாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதில் பருத்திவீரன் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் என்ற வரம்புகளை கடந்து, ஒரு படைப்பாளியான அமீரை, தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக, தனிமனித விமர்சனமாக ஞானவேல் ராஜா பேசிய இழிவான வார்த்தைகள், பலரையும் எரிச்சலடைய செய்துள்ளது. அதுவும் பருத்திவீரன் போன்ற ஒரு சிறந்த படைப்பை, கடுமையாக உழைத்து உருவாக்கி தந்து, முதல் படத்திலேயே கார்த்திக்கு ஹீரோ அந்தஸ்தை பெற்றுத் தந்த அமீரை விமர்சிப்பது பலரையும் ஆவேசமடைய செய்துள்ளது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திரு. ஞானவேல் ராஜா, பருத்திவீரன் படம் குறித்து உங்களுக்குள் இருப்பது பொருளாதாரம் சார்ந்த பிரச்னை மட்டுமே. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த ஒரு படைப்பாளியின் பெயருக்கும், புகழுக்கும் படைப்புக்கும் களங்கும் ஏற்படுத்தும் விதமாக நீங்கள் பேசியது, மிகவும் கண்டிக்கதக்கது.
உங்கள் படத்தின் மூலமாக தான், அமீர் வேலை கற்றுக்கொண்டார் என்று எக்காளமாக கூறி, வன்மமாக சிரிப்பது என்னைப் போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும். ஏனென்றால், உண்மையான படைப்பாளிகள் எப்போதும், சாகும் வரை கற்றுக்கொண்டே தான் இருப்பார்கள். ஒரு மிகச்சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும், அவரது நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். பிரச்னையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும், என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.





