பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் நடிகர் அனுராக் காஷ்யப். அவர் தமிழில் கடந்த 2018ம் ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து மிரட்டி இருந்தார். இந்த படத்தில் அவரது வில்லன் நடிப்பு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது.
தொடர்ந்து விஜய் நடித்த லியோ படத்திலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த மகாராஜா படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாளத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற ரைபிள் கிளப் படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்திலும் அவர் நடித்திருந்தார்.
இந்தியில் பல படங்களை இயக்கியவர் அனுராக் காஷ்யப். அவரது சில படங்கள் திரையரங்கில் வெளியாகவதற்கு முன்பே தடை செய்யப்பட்டுள்ளன. 2 பாகங்களாக அவர் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களை கவர்ந்த படமாக இருந்தது. இதற்கிடையே பாலிவுட் சினிமா மீதும் பாலிவுட் நடிகர்கள் மீதும் தொடர்ச்சியான விமர்சனங்களை அனுராக் காஷ்யப் முன்வைத்து வருகிறார்.
தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர் அனுராக் காஷ்யப். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் நடிகர் அனுராக் காஷ்யப் கூறியதாவது, சினிமாவில் இருப்பவர்கள் அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்க ஆசைப்படுவதில்லை. ஆனால் ஒருமுறை அவர்கள் அந்த முடிவை எடுத்து விட்டால் அதன் பிறகு அவர்களால் அதில் இருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் ஒருமுறை பணிந்து விட்டால் என்றென்றும் அவர்கள் பணிந்தே கிடக்கிறார்கள்.
சில விஷயங்களுக்கு நீங்கள் ஒரு முறை சம்மதம் தெரிவித்து விட்டால் அதன் பிறகு உங்களால் முடியாது என்று மறுப்பு கூற முடியாது. ஏனென்றால் அந்த ஒரு முறை நீங்கள் சம்மதம் சொல்வதன் மூலம் ஏராளமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். அந்த பலனை அனுபவித்த உங்களால் மறுமுறை முடியாது என்று சொல்லவே முடியாது. இதுகுறித்து அவர்கள் விழிப்படைந்து இருந்தாலும் சில சமயங்களில் தர்மசங்கடமாகவும் அவமானமாக கருதினாலும் அவர்களால் எதுவுமே செய்ய முடிவதில்லை.
மற்ற திரைத்துறையை பொருத்தவரை பிராந்திய ரீதியாக அவர்கள் மிகவும் வலுவாக இருக்கிறார்கள். ஆழமான கலாச்சார தொடர்பு கொண்டிருப்பதால் அவர்களை பிரிக்கவே முடியாது என்று அந்த நேர்காணலில் நடிகர் அனுராக் காஷ்யப் கூறியிருக்கிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, என் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் சூழல் இருக்கும் தென்னிந்திய சினிமாவுக்கு போகப் போகிறேன். பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேற இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.





