தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகனாக இருப்பவர் நடிகர் துருவ் விக்ரம். இவர் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் சீயான் விக்ரமின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதித்ய வர்மா என்ற படம் மூலம் துருவ் விக்ரம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதுவரை அவர் நடித்த படங்களில் மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் காளமாடன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிகர் துருவ் விக்ரம் காதலித்து வந்ததாகவும் அவர்கள் காதல் பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்தான் பைசன் காளமாடன் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போதுதான் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் துருவ் விக்ரம் தன்னை பற்றிய விமர்சனங்கள் குறித்து பேசியதாவது, சினிமாத்துறையை நாம் தேர்வு செய்யும் போதே நம்மைப் பற்றி விமர்சனங்களும் தீவிரமான கண்காணிப்புகளும் இதன் ஒரு அங்கமாகவே இருக்கும் என்பதை மிக ஆரம்பத்திலேயே நாம் புரிந்து கொள்கிறோம்.
இந்த தொழில் எவ்வளவு அழகானது என்றாலும் இதில் பல பரிமாணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் அவற்றை முழுமையாக ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் விமர்சனங்கள் என்னை ஒருபோதும் பாதித்ததே இல்லை என்று கூறி விட முடியாது.
நாம் யார்? நமக்கான விஷயங்கள் என்ன என்பதில் தெளிவு வேண்டும். நமக்கு எது முக்கியமானது? நாம் நேசிக்கும் மனிதர்கள் யார் என்பதை அறிந்து அவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்மையோடு இருக்கும்போதும் நம் எல்லை என்னவென்று நமக்குத் தெரியும் போதும் இந்த விமர்சனங்களால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது.
அந்த வகையில் கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக என் திரை பயணத்தில் எனக்கு துணையாக நின்று ஊக்கமளிக்கும் ஒரு சிறிய நல்ல நட்பு மற்றும் ஆதரவாளர் வட்டம் அமைந்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் நான் சொல்வேன் என்று நடிகர் துருவ் விக்ரம் கூறியிருக்கிறார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது காதலர் ஒரு நாளில் ரெமோவாகவும் மறுநாள் அந்நியனாகவும் மாறிவிடுவார் என்று கூறியிருந்தது அதிக கவனம் பெற்றது.





