நடிகைகள் ரகசிய திருமணம் என்ற வதந்திகளின் சர்ச்சை, கடலில் ஓயாத அலைகளை போல, தமிழ் சினிமாவில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த சில தினங்களாக, நடிகை திரிஷா, மலையாளப்பட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்வதாக ஒரு தகவல் பரவியது. அதற்கு வதந்தியை பரப்பாதீங்க என, திரிஷா பதில் கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்போது, மீண்டும் நடிகை சாய்பல்லவி திருமணம் செய்துக்கொண்டு விட்டதாக ஒரு தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் அவர் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களுடன் பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும், சாய் பல்லவி திருமணம் செய்தது உண்மைதான் போலும் என நினைக்க துவங்கி விட்டனர்.
ஆனால் உண்மையில், எஸ்கே 21 என்ற சிவகார்த்திகேயனின் புதிய படத்தில், சாய்பல்லவி நடிக்கிறார். அந்த படத்தின் துவக்க விழா பூஜையில் பங்கேற்றவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அனைவரும் வரிசையாக நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த பூஜை சூழலில் சாய்பல்லவி மாலையும், கழுத்துமாக நிற்கும் புகைப்படங்களை கிராப் செய்து பதிவிட்டு, இந்த திருமண வதந்தியை பரப்பியுள்ளனர்.
இதையடுத்து தற்போது நடிகை சாய்பல்லவி இந்த வதந்தி குறித்து, கோபமாக பதிலளித்த தகவல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், எனக்கு வதந்திகளை பற்றி கவலையில்லை. ஆனால் வதந்தியில் சம்பந்தப்பட்ட வர்களுக்கு நண்பர்கள், குடும்பம் இருக்கிறது. இதனால், அவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதுபற்றி நான் பேசியே ஆக வேண்டும், என்று கூறி இருக்கிறார்.
படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கிராப் செய்து, இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்புகின்றனர். என் படங்கள் பற்றிய நல்ல அறிவிப்பை வெளியிட நான் முடிவு செய்திருந்தேன்,இந்த நேரத்தில், வேலையில்லாமல் உள்ள சிலர் செய்த விஷயங்களுக்காக, நான் விளக்கம் தர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். வதந்தி பரப்புவது,மிகவும் இழிவான செயல், என கோபமாக தன் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் குஷ்பு, ராதிகா வில் துவங்கி மீனா, லட்சுமி மேனன், திரிஷா, அனுஷ்கா, சாய்பல்லவி என பலரும் இதுபோன்ற திருமண வதந்தி சர்ச்சைகளில் சிக்கிக்கெொண்டே இருப்பதால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வகையில், ஏதேனும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





