தமிழ் சினிமாவில் இதுவரை 6 முறை தேசிய விருது வென்றவர் கவிஞர் வைரமுத்து. இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் கே பாக்யராஜ் இயக்கிய பல படங்களில் பல பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். இருவரிடமும் நெருக்கமான அன்பில் நட்பில் இருந்தவர்.
சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜா உடல் மூப்பு காரணமாக 84வது வயதில் மறைந்தார். தொடர்ந்து 17 நாட்களில் அவரது சீடர் இயக்குனர் கே பாக்யராஜூம் திடீரென தனது 73வது வயதில் மறைந்து விட்டார். குருநாதரும் அவரை தொடர்ந்து சிஷ்யரும் அடுத்தடுத்து மறைந்த நிலையில் இது தமிழ் சினிமா துறையினரை ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது.
மறைந்த இரு சிகரங்களான இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் கே பாக்யராஜ் நினைவை போற்றுகிற வகையில் கடந்த 16ம் தேதி சென்னையில் சினிமா சங்கங்கள் சார்பில் ராஜகோபுரம் நினைவு உற்சவம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, மறைந்த பேராளுமைகள்பாரதிராஜா – கே.பாக்யராஜ் இருவர்க்கும் கலைத்துறையினர் புகழ்வணக்கம் செலுத்தினார்கள். அந்த மேடையில் கே.பாக்யராஜ் எழுதிய சுயசரிதை நூலை வெளியிட்டுப் பேசினேன். தமிழ்க் கலாசாரத்தின் ஆதிச் சுவடுகள் அடுத்த நூற்றாண்டில் அழிந்து போகக் கூடும்.
கிராமக் கலாசாரத்தின் அடையாளங்களை அறிந்துகொள்ள வேண்டுமெனில் பாரதிராஜாவின் படங்களைக் கீழடி போல் பாதுகாக்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் நிலவி வந்த பாலியல் வறட்சி ஆணையும் பெண்ணையும் அழுத்தி வைத்தது. அந்தக் கலாசார அடக்குமுறைகளைத் தாண்டி ஆணின் கனவுகளையும் பெண்ணின் ஆசைகளையும் வாய்விட்டுப் பேச வைத்தவர் என்று எதிர்காலத்தில் பாக்யராஜ் அறியப்படுவார்.
இரு பெரும் கலைஞர்களும் கலையை வாழ்விலிருந்து கற்றுக்கொண்டு திரையில் ஒளி பெயர்த்தவர்கள் ‘வாழ்விலிருந்து கதை எழுதுங்கள்’ இதுதான் இளம் கலைஞர்களுக்கு அவர்கள் சொல்லிச் சென்ற பாடம் என்று தனது எக்ஸ் பதிவில் கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





