நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னட மொழியில் உருவான படம் காந்தாரா. கன்னடத்தில் அபார வரவேற்பை வெற்றியை பெற்ற இந்த படம் தமிழ் தெலுங்கு இந்தி என பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. சகல தரப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து கடந்த ஆண்டில் காந்தாரா சாப்டர் 1 படமும் வெளியானது. இந்த படத்தையும் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருந்தார். இதில் ருக்மணி வசந்த் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
குறிப்பாக காந்தாரா சாப்டர் 1 படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தன. அதே போல் வில்லன் நடிப்பில் ஜெயராமும் வில்லி நடிப்பில் ருக்மணி வசந்தும் வேற லெவலில் பெர்பாமென்ஸ் செய்து ரசிகர்களை மிரட்டியிருந்தனர். காந்தாரா படம் 3ம் பாகமாகவும் விரைவில் உருவாக உள்ளது. அதற்கான திட்டத்தில் ரிஷப் ஷெட்டி இருந்து வருகிறார்.
கன்னட சினிமாவில் ஆரம்பத்தில் புதுமுக நடிகராக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர் ரிஷப் ஷெட்டி. ஆனால் காந்தாரா படம்தான் அவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை கொடுத்தது. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகுதான் அவர் இந்திய சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி கூறியதாவது, சினிமாவில் நடிக்க வேண்டும் என்று எனக்கு சின்ன வயதில் இருந்தே மிகவும் ஆசையாக இருந்தது. நடிக்க வருவதற்கு முன்பு நான் எல்லா வேலையும் பார்த்து இருக்கிறேன். தண்ணீர் கேன் போட்டு இருக்கேன். ஹோட்டல்ல சர்வரா வேலை பார்த்து இருக்கேன்.
ஒருநாள் எனக்கு ஒருத்தர் போன் பண்ணி 10 தண்ணீர் கேன் வேணும்ன்னு சொன்னார். அங்க போய் பார்த்தால் ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் தொடக்க விழா நடந்துட்டு இருந்தது. தண்ணீர் கேன் போட்டுட்டு நான் சம்பாதித்து வைத்திருந்த பணத்தைக் கட்டி நானும் அந்த கோர்ஸ்ல அப்பவே சேர்ந்துட்டேன். அப்படி தான் சினிமாவுக்கு உள்ளே நான் வந்தேன் என்று நடிகர் ரிஷப் ஷெட்டி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.





