தமிழ் சினிமா ரசிகர்களால் கேப்டன் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய போட்டி நடிகர்களாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் ஒரு தனி டிராக் போட்டு ரசிகர்களின் மனதில் குடிபுகுந்தவர் இவர்.
ஆக்சன் ஹீரோவாக ரசிகர்களிடையே கவனிக்கப்பட்ட விஜயகாந்த், தன்னுடைய வள்ளல் தன்மையால் பலரையும் ஈர்த்தார். தன்னிடம் உதவி என்று வருபவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்துகொடுத்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார் விஜயகாந்த்.
அதே போல் விஜயகாந்த் அலுவலகத்திற்கு எப்போது போனாலும் உணவு பரிமாறப்படுமாம். இதன் மூலம் பல ஏழை எளியோரின் பசியை தீர்த்துவைத்தவர் விஜயகாந்த். மேலும் சினிமாவில் தன்னை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு எந்த விதமான நஷ்டமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வாராம். இதற்கு எடுத்துக்காட்டான ஒரு சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பகிர்ந்துகொண்டுள்ளார்.
1987 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த “கூலிக்காரன்” திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இத்திரைப்படத்திற்காக ஒரு சண்டை காட்சியில் விஜயகாந்த் நடித்துக்கொண்டிருந்தபோது, அவரது ஒரு பக்க தோள்பட்டை இறங்கிவிட்டதாம். அப்போது அங்கிருந்தவர்கள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு கூறினார்களாம்.
ஆனால் விஜயகாந்தோ தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்திற்காக எந்த பக்கம் தோள்பட்டை இறங்கியதோ அந்த பக்கம் உள்ள கையை பயன்படுத்தாமல் மற்றொரு கையை பயன்படுத்தி சண்டை போட்டாராம். இதனை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியப்பட்டுப்போனார்களாம்.
இதே போல் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த “நல்லவன்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போதும் இது போல் விஜயகாந்திற்கு தோள்பட்டை இறங்குவிட்டதாம். ஆனாலும் தொடர்ந்து நடித்தாராம்.





