தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் அஜீத்குமார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பைக் ரேஸ் கார் ரேஸ் போன்றவற்றில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். சர்வதேச அளவில் நடக்கும் கார் மற்றும் மோட்டார் பைக் போட்டிகளில் தொடர்ந்து அஜீத்குமார் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் அஜீத்குமார் கார் ரேசிங் என்ற சொந்த கார் ரேஸ் அணியை உருவாக்கி பல்வேறு சர்வதேச கார் ரேஸ்களில் தொடர்ந்து அவர் களம் இறங்கி வருகிறார். தற்போது ஐரோப்பாவில் நடந்துவரும் லீமேன்ஸ் சாம்பியன்ஷிப் கார் ரேஸ் போட்டியில் அஜீத்குமாரின் அணி போட்டியிட்டு வருகிறது.
இந்த கார் ரேஸ் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் நடிகர் அஜீத்குமார் ஓட்டிச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. காரின் வேகம் குறையாமல் கட்டுப்பாடு இல்லாமல் பாய்ந்து சென்ற அந்த கார் களத்தில் இருந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலைத் தொடர்ந்து காரின் சக்கரங்கள் செயல் இழந்து அடுத்தடுத்து தீவிரமான தொழில்நுட்ப கோளாறுகளும் ஏற்பட்டன.
காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்த போதிலும் நவீன ரேஸிங் கார்களில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் காரை ஓட்டிச் சென்ற அஜீத்குமாரை காயம் இன்றி காப்பாற்றியது. மேலும் பல ஆண்டுகாலமாக கார் ரேஸ் அனுபவமும் தொழில் முறை திறனும் கொண்ட அஜீத்குமார் எந்த வித காயம் இன்றி காரில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார்.
நடிகர் அஜீத் குமார் கார் விபத்தில் சிக்கிய தகவல் பரவியதும் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். ஆனால் அவர் எவ்வித காயமும் இன்றி பாதுகாப்பாக நலமாக திரும்பியுள்ளார் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவரது ரசிகர்கள் ஆறுதலும் நிம்மதியும் அடைந்தனர்.
ஏற்கனவே இதுபோல் 4 முறை நடிகர் அஜீத்குமார் கார் ரேஸ் விபத்தில் சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலி ஸ்பெயின் மலேசியா மற்றும் துபாய் போன்ற நாடுகளில் நடந்த கார் ரேஸ் பந்தயங்கள் மற்றும் பயிற்சிகளின் போது நடிகர் அஜீத்குமார் விபத்துகளை மேற்கொண்டார். அபாயங்கள் நிறைந்த விளையாட்டாக இருந்தாலும் சவால்களை எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் துணிச்சலாக கார் ரேசில் நடிகர் அஜீத்குமார் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





