“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் “தளபதி 68” திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். “லியோ” திரைப்படத்திற்கு எந்தளவு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அந்தளவு எதிர்பார்ப்பு “தளபதி 68” திரைப்படத்திற்கும் இருக்கிறது.
அந்த எதிர்பார்ப்புக்கு வெங்கட் பிரபுவும் ஒரு காரணம் என்றாலும், இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா 20 வருடங்களுக்கு முன்பு விஜய் நடித்த “புதிய கீதை” திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அதன் பின் விஜய் நடித்த எந்த திரைப்படத்திற்கும் அவர் இசையமைத்ததில்லை. இவ்வாறு 20 வருடங்களுக்குப் பிறகு விஜய் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது பலரது எதிர்பார்ப்புகளையும் எகிறவைத்துள்ளது.
“தளபதி 68” திரைப்படத்தில் வயதான தந்தை, மகன் என விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு வேடங்களையும் தத்ரூபமாக காட்சிப்படுத்த தற்போது விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனராம்.
அங்கே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள Institute of creative technology என்ற மையத்தில் விஜய்யை உடல் முழுவதும் ஸ்கேன் செய்து, அந்த ஸ்கேன் செய்யப்பட்ட உருவத்தை வைத்து விஜய்யின் வயதான கதாபாத்திரத்தை வடிவமைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனராம்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, “தளபதி 68” திரைப்படத்தின் கதை இதுதான் என்று அவருக்கு வந்த தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “தளபதி 68” திரைப்படத்தில் விஜய், ரா ஏஜெண்டாக நடிக்கிறார் என கூறப்படுகிறதாம். மற்றொரு பக்கம் அதில் விஜய், அமலாக்கத்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார் எனவும் கூறுகிறார்களாம். வெங்கட் பிரபுவின் “மாநாடு” திரைப்படத்தில் எப்படி ஒரு சமூக நீதி கருத்து இருந்ததோ அதே போல் ஒரு கருத்து “தளபதி 68” திரைப்படத்திலும் இருக்கிறதாம். அதுதான் இத்திரைப்படத்தின் சஸ்பென்ஸ் என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.





