தமிழ் சினிமாவை பொருத்த வரை நல்ல கதை திரைக்கதை கொண்ட படங்கள் 90 சதவீதம் வருவதில்லை. ஹீரோவை மையப்படுத்திய கதைகளை எடுத்து இயக்குனர்கள் ரசிகர்களை ஏமாற்றி வருகின்றனர். சொந்த சரக்கு இல்லாததால் பல இயக்குனர்கள் மற்ற மொழி படங்களை ரீ மேக் செய்து தமிழில் படம் எடுக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் களம் காவல் என்ற படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. மம்முட்டி விநாயகன் ஆகிய 2 நடிகர்களின் கேரக்டர்களை மட்டுமே மையப்படுத்திய இந்த படத்தில் கணவரை இழந்த விவகாரத்து ஆன பெண்களை கொல்லும் சைக்கோ கொலைகாரன் கேரக்டரில் மம்முட்டி நடித்திருக்கிறார்.
அந்த கொலைகளை துப்பறிந்து கொலைகாரனை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக விநாயகன் நடித்திருக்கிறார். மிகவும் எளிய ஒரு கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் எந்த பிரமாண்டமும் கிடையாது. காட்சிக்கு காட்சி திரைக்கதையில் அப்படி ஒரு விறுவிறுப்பு. 2 மணி நேரம் படம் போவதே தெரியாத அளவுக்கு ஒரு அற்புதமான படைப்பாக இந்த படம் வெற்றி பெற்றது.
ஆனால் தமிழில் நடிகர்கள் ரஜினி துவங்கி தனுஷ் வரை ஒரே பில்டப் படங்கள்தான் வருகின்றன. அதிலும் சகோதர நடிகர்கள் சூர்யா கார்த்தி போன்றவர்களின் படங்கள் எல்லாம் அவர்கள் கேரக்டரே படத்தில் தெரிவதில்லை. சூர்யாவும் கார்த்தியும் தெரியும் கதைகளில்தான் அவர்கள் நடிக்கின்றனர்.
அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் நிறுவனம் ரூ. 81 கோடிக்கு டிஜிட்டல் உரிமம் வாங்கியது. இதில் அந்த நிறுவனம் சம்பாதித்தது வெறும் 1 கோடி ரூபாய்தான். 80 கோடி வரை நஷ்டத்தை சந்தித்தது. இப்போது சமீபத்தில் வெளியான கார்த்தி நடித்த வா வாத்தியார் படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் அமேசான் பிரைம்தான் அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது.
அந்த படத்துக்கு தியேட்டரில் கிடைத்த மோசமான வரவேற்பு அமேசான் பிரைம் நிறுவனத்தை கதிகலங்க வைத்துவிட்டது. இப்படி அண்ணன் தம்பி சகோதர நடிகர்களால் பலத்த நஷ்டத்தை சந்தித்த அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் இனி சொந்த செலவில் வெப் சீரிஸ் தயாரிப்பது, நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களை மட்டுமே அதிக விலைக்கு வாங்குவது என்ற முக்கிய முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.





