விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பிக்பாஸ் சீசன் 10ல் நடிகர் விஜய் சேதுபதி, லீடர்ன்னா என்ன லீடர்ஷிப்புன்னா என்ன என்பது குறித்து 20 வினாடிகள் ஒரு கருத்தை பேசியிருந்தார். அது தவெக குறித்தும் விஜய் குறித்தும் விமர்சித்து பேசியதாக அவர் மீது தவெக கட்சியினர் ஆவேசமாக பதிவிட்டு வருகின்றனர். ஆனால் விஜய் சேதுபதி பொதுவான ஒரு கருத்தாகவே அதை பேசியிருந்தார்.
நடிகர் விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று மாமனிதன் தர்மதுரை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. தனது எக்ஸ் பதிவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக அவர் ஒரு பதிவை செய்திருக்கிறார். அந்த பதிவில் சீனு ராமசாமி கூறியிருப்பதாவது, அனைவருக்கும் அன்பான வணக்கம். விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன்.
எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்ல கூடிய மனிதன். மறைந்திருந்து தாக்கம் குணம் கொண்ட மனிதன் அல்ல. உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். மற்ற ஓடிடி சினிமா இணையதள செயல்பாடுகள் எல்லாமே சட்டசபை காலங்களிலே மந்தமாகிவிட்டது. இதுதான் உண்மை.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம். ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
அதை வைத்து அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது எனக்கு என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்று இந்தியா முழுவதும் நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது. புதியவர்களை ஊக்கப்படுத்த பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர். தனக்கு பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலேயே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர். நிறைய புதிய இயக்குனர்களோடு பயணித்தவர்.
100 மூத்த திரை தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர். பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்து உதவியவர். முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த பதிவில் இயக்குனர் சீனு ராமசாமி கூறியிருக்கிறார்.





