மேடைப் பேச்சு என்பது நாகரிகமானது. பலரது மேடைப் பேச்சை மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மணிக்கணக்கில் பேசினாலும், இன்னும் சிறிது நேரம் பேசுவாரா என்று எதிர்பார்க்கும் அளவுக்கு சில பேச்சாளர்கள் மிகச் சிறந்த ஆழமான சொற்பொழிவை தருவதில் வல்லவர்களாக இருக்கின்றனர்.
அதே போல் தமிழ் சினிமாவிலும் ரஜினிகாந்த் கமல்ஹாசன் வைரமுத்து போன்றவர்களும் கருத்தாழம் மிக்க பேச்சை தருபவர்கள். தங்களது அனுபவத்தை பேசும்போது வாழ்க்கை குறித்த யதார்த்தங்களையும், அது தந்த பாடங்களையும் அழகாக சொல்லி விடுவார்கள். தமிழருவி மணியன் நெல்லை கண்ணன் சாலமன் பாப்பையா சுகிசிவம் என பலரும் சிறந்த பேச்சாளர்களாக உள்ளனர்.
ஆனால் சில பிரபலங்கள் இப்போதெல்லாம் அழுத்தமான விஷயங்களை காட்டிலும் ஜாலியாக பேசுவது, வாயில் வருவதை எல்லாம் பேசி விடுவது, பிறகு அது இணையத்தில் வைரலாவது என்பது தொடர்கதையாக உள்ளது. அதிலும் இயக்குனர் மிஷ்கின் அடிக்கடி இதுபோல் சர்ச்சையாக பேசி விமர்சனத்தில் சிக்கிக் கொள்கிறார்.
நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில் தினகரன் இயக்கத்தில் உருவான படம் பாட்டல் ராதா. இந்த விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது, நான் மிகப்பெரிய குடிகாரன். மதுரை ரசித்து ருசித்து குடிப்பவன். ஆனால் எப்போதும் அந்த மது என்னை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது இல்லை.
நான் உதவி இயக்குனராக இருந்த போது குடிக்க செல்வேன். அப்போது கொசுவர்த்தி எடுத்துச் செல்வேன். ஏனென்றால் குடிக்க ஆரம்பித்துவிட்டால் சினிமா பற்றி பேசுவோம். இளையராஜாவை பாடுவோம். அப்போது எங்கிருந்தாவது ஒரு பாட்டல் எனக்கு வந்துவிடும்.
முக்கியமாக இளையராஜா தான் பலரை குடிகாரனாக மாற்றியது. அவர்தான் குடிக்கு ஆரம்ப புள்ளி. இந்த போதையை விட இளையராஜா மிகப்பெரிய போதை. குடி எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. குடி இல்லாத நாடே இல்லை. சாராயம் காய்ச்சும் அளவுக்கு குடியில் எனக்கு அனுபவம் இருக்கிறது என்று மிஷ்கின் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.





