நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக ஒரு நட்சத்திரமாக இருந்து வருகிறார். தொடர்ந்து அவர் பல லைன் அப்களில் பரபரப்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இதற்கிடையே விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் தொகுப்பாளராக பணிசெய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டிராஜ் இயக்கத்தில் தலைவன் தலைவி படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. ஆனால் அவர் நடித்த படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. குறிப்பாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கியுள்ளது.
இந்த நிலையில் விஜய் சேதுபதியில் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த பத்தா படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நவம்பர் 20ம் தேதி பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு என்ற படமும் ரிலீஸ் ஆக உள்ளது.
அதன்பிறகு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி சாய்பல்லவி நடித்துள்ள இஞ்சி வெல்லம் படம் வெளியாக உள்ளது. இதற்கிடையே வருகிற டிசம்பர் மாதம் டிரெயின் படத்தை வெளியிட படக்குழு தரப்பில் திட்டமிட்டுள்ளதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.
அதாவது அக்டோபர் நவம்பர் ஜனவரி என மாதம் ஒரு திரைப்படம் என விஜய் சேதுபதி நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், டிசம்பரில் டிரெயின் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும் அக்டோபர் 23ம் தேதி விஜய் சேதுபதி தமன்னா நடித்த சீனு ராமசாமி இயக்கிய தர்மதுரை படமும் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
கடந்த 6ம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 3 மாதங்களுக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் சனி ஞாயிறு தினங்களில் விஜய் சேதுபதி பேசுவதால் அந்த நாட்களில் பிக்பாஸ் பார்வையாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. அந்த நேரத்தில் அவரது படங்கள் ரிலீஸ் ஆவது ஒருவிதத்தில் பிரமோசனாக இருந்து அவரது படங்களுக்கு பலம் சேர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





