பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் பட்டறையில் இருந்து வெளிவந்தவர் அட்லீ. தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன இவர், முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் அடுத்த படத்திலேயே விஜய்யின் ‘தெறி’ படத்தை இயக்கி மாஸ் டைரக்டராக தன்னை மாற்றிக்கொண்டார்.
அதன் பின் தொடர்ந்து விஜய் உடனேயே பயணித்த அட்லீ மெர்சல், பிகில் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கினார். அட்லீ படங்கள் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், அவர் வணிக ரீதியாக வெற்றி தரும் இயக்குநர் என்ற பெயரை பெற்றார். அவர் இயக்கிய அனைத்து படங்களும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை ஈட்டித் தந்ததே இதற்கு முக்கிய காரணம்.
விஜய்யின் தம்பியாக வலம் வந்துகொண்டிருந்த அட்லீக்கு, பாலிவுட் வாய்ப்பு கதவை தட்டியது. அதுவும் முதல் படத்திலேயே பாலிவுட் பாதுஷா என அழைக்கப்படும் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜவான் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் தலைப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்புகள் மேலோங்கி இருந்தது. அதிலும் இப்படத்தின் மூலம் நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அவர் தவிர்த்து விஜய் சேதுபதி, யோகிபாபு, இசை அனிருத் என பல தமிழ் நட்சத்திரங்களை இப்படத்தில் அட்லீ பணியாற்ற வைத்திருக்கிறார்.
மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் உலகம் முழுவதிலும் 10 ஆயிரம் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது. இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 400 கோடி வசூல் செய்துவிட்டதாக கூறப்பட்டது. இதனிடையே ஜவான் படம் வெற்றியடைய வேண்டி, பல சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து பதிவிட்டு வந்தனர்.
அந்த வரிசையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஷாருக்கான், அட்லீ உள்ளிட்ட படக்குழுவினருக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்த நிலையில், அவரது இந்தப் பதிவை டேக் செய்த ஷாருக்கான், மிகவுன் நன்றி. நேரம் இருந்தால் இந்த படத்தை தமிழில் பாருங்கள். அதன்பின் நாங்கள் அனைத்தையும் சரியாக செய்திருக்கிறோமா என்பதை என்னிடம் கூறுங்கள். லியோ படத்திற்கு என்னுடைய மொத்த அன்பும் இருக்கும் என பதிவிட்டிருந்தார்.
ஷாருக்கானின் இந்த பதிவிற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், நீங்கள் நிச்சயம் சரியாக செய்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். ஏற்கனவே ஜவான் படத்தை பார்க்க திட்மிட்டுள்ளேன். லியோ படம் ரிலீஸ் ஆனதும் அதை உங்களோடு சேர்ந்து பார்க்க விரும்புகிறேன். அந்தப் படத்தைப் பற்றி நீங்கள் சொல்லும் கருத்தை கேட்க ஆசைப்படுகிறேன்’ என பதிவிட்டிருந்தார்.
விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.





