விஜய்தான் இப்போது கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர். லியோ படத்துக்கு 140 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படும் சூழலில் தனது அடுத்த படத்துக்கான சம்பளமாக 175 கோடி ரூபாயிலிருந்துதான் பேச்சுவார்த்தையையே தொடங்குகிறார் என தகவல் வெளியாகிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் விஜய்தான் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோ என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் இப்போது வேண்டுமானால் தனக்கென தனி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கலாம். ஆனால் இந்த சிம்மாசனத்தில் அவர் இப்படி அமர்வதற்கான அஸ்திவாரத்தை போட்டவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான். விஜய்யை வைத்து ஆரம்பத்தில் படங்கள் இயக்கி பிற இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டவர். ஏன் விஜய்யின் கரியரில் முக்கிய படமான துப்பாக்கி பட வாய்ப்பு எஸ்.ஏ.சியால்தான் விஜய்க்கு வந்தது.
சுமூகமாக போய்கொண்டிருந்த தந்தை – மகன் உறவு கடந்த சில வருடங்களாகவே பிரச்னையில் இருந்தது. தாய், தந்தைக்கு எதிராக நீதிமன்ற படிகள் ஏறிய விஜய் தந்தையுடன் பேச்சுவார்த்தையை சுத்தமாகவே நிறுத்திவிட்டார். தாய் ஷோபாவுடன் மட்டும் பேசினார். இதற்கிடையே எஸ்.ஏ.சியுடன் அவர் சமாதானம் ஆகிவிட்டார் என்று தகவல் வெளியானாலும் சில மாதங்களுக்கு முன்பு அவர் எடுத்த புகைப்படத்தில் ஷோபா மட்டுமே இருந்தார். எனவே விஜய் – எஸ்.ஏ.சி மனஸ்தாபம் இன்னும் போகவில்லை என்ற பேச்சு எழுந்தது.
இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு வாய்ஸ் நோட்டை வெளியிட்டிருந்தார். அதில், “நான் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ஏதோ சரியில்லை என்று தோன்றியது. உடனே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்தேன். அவர் பரிசோதனை செய்துவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொன்னார். அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சையும் செய்துகொண்டேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் எல்லோருக்கும் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். அதை ஏற்றுக்கொண்டு சென்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் நேற்று அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார். அவர் இங்கு வந்த கையோடு ஒரு புகைப்படம் வெளியானது. அதில் விஜய்யும், எஸ்.ஏ.சந்திரசேகரும் அருகருகே அமர்ந்திருக்க பின்னால் ஷோபா நின்றுகொண்டிருந்தார். அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பா மகனுக்குள் எந்த சண்டையும் இல்லை எனது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது என கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர்.
நிலைமை இப்படி இருக்க அமெரிக்காவிலிருந்து விஜய் திரும்பியதற்கான காரணமாக ஒன்று சொல்லப்படுகிறது. அதாவது எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அறுவை சிகிச்சை நடக்கப்போகிறது என்பது விஜய்க்கும் முன்கூட்டியே தெரியாதாம். எஸ்.ஏ.சி வெளியிட்ட வாய்ஸ் நோட்டை கேட்ட விஜய் உடனடியாக பதறியடித்து ஃப்ளைட்டை பிடித்து வந்துவிட்டாராம்.





