விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஹீரோ, வில்லன் என இரண்டுவிதமான கேரக்டர்களிலும் நடித்து வரும் சிறந்த நடிகர். கேரக்டர் எப்படி இருந்தாலும், அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதே முக்கியம் என்பதை நிரூபித்து வருகிறார்.
‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும், ‘விக்ரம்’ படத்தில், கமலுக்கு வில்லனாகவும் நடித்தார். தொடர்ந்து இப்போது, அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்துள்ள ‘ஜவான்’ படத்தில், வில்லனாக நடித்துள்ளார். 23 படங்களில் இருந்து, அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்ட படம் என, ரசிகர்களால் கடுமையான விமர்சிக்கப்பட்டாலும் 800 கோடி ரூபாய், வசூலை கடந்து ‘ஜவான்’ படம், மாபெரும் வெற்றிப்பாதையை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து ஷாருக்கான், அட்லீ உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். மும்பையில், ஜவான் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் நடந்திருக்கிறது. இதில் ஷாருக்கான், அட்லீ, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், அனிரூத் உள்பட, படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
அப்போது பேசிய விஜய் சேதுபதி, ஷாருக்கான் மீது, தமிழ் மக்கள் கொண்டிருக்கும் அன்பை நான் நேரடியாக பார்த்தேன். ஜவான் படம் முதல் நாள் ரிலீஸ் ஆன அன்று, டிக்கெட் கிடைக்காமல் பலரும் என்னிடம் போன் செய்து கூறினார்கள். ஷாருக்கான் மக்களிடம் அவ்வளவு அன்பை அவர் பெற்றிருக்கிறார். மக்கள் அவரை, அதிகளவில் நேசிக்கின்றனர். ஷாருக்கான் என்ற பெயர் ஒன்றே போதும். அவர் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதம், மற்றவர்களை நடத்தும் விதம் என அன்பை மட்டுமே தருகிறார் என்று பாராட்டி பேசினார்.
இதற்கு பதிலளித்து மேடையில் நகைச்சுவையாக பேசிய ஷாருக்கான், நானும் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விஜய் சேதுபதியை நேசிக்கிறேன். நாம் திருமணம் செய்து கொள்ளலாம். இருவரும் இணைந்து நிறைய படங்களில் நடிப்போம், என்றார். அதில் தவறு எதுவும் இல்லை சார், என பதிலளித்து தன் சம்மதத்தை சிரித்தபடி கூறியதுதான் இதில் ஹைலைட்.
இந்நிலையில், மும்பையில் உள்ள ஷாருக்கானின் மன்னத் பங்களா வீட்டின் முன் ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் திரண்டனர். பால்கனியில் இருந்து ரசிகர்களுக்கு காட்சியளித்து, தனது ஸ்டைலில் போஸ் தந்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் ஷாருக்கான். அந்த நேரத்தில் விசில் அடித்து, ஆரவாரம் செய்து ரசிகர்கள் கொண்டாடிய வீடியோ காட்சிகள், இப்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





