நடிகர் விக்ரம் சமீப காலமாக மிகப்பெரிய வெற்றியை கொடுக்க தடுமாறி வருகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். தனது தேர்ந்த நடிப்பின் மூலம் உடல் மொழியிலும், வசனத்திலும் அசர வைத்திருந்தார் விக்ரம்.
அந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்திருந்தாலும், அதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்ததால் அது முழுக்க முழுக்க சீயான் விக்ரமின் திரைப்படம் என்று கூற முடியாது.
அதுபோக விக்ரமின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பத்து எண்றதுக்குள்ள, இருமுகன், கோப்ரா, சாமி ஸ்கொயர், ஸ்கெட்ச் ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியையே சந்தித்தன. இதனால் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க முடியாமல் சீயான் தவித்து வருகிறார். இந்த சூழலில் தான் அவர் பா ரஞ்சித்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
தங்கலான் என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. கோலார் தங்க வயலில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பா ரஞ்சித், திரைக்கதை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், சீயான் விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் விக்ரமுடன் சிம்ரன், ரிது வர்மா, ராதிகா, திவ்யதர்ஷினி, சதீஷ், ஜெயிலர் படம் வில்லன் விநாயகம் உள்ளிட்ட ஏராளமான நடித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல் நீடித்தது.
தற்போது அந்தப் படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே ஜூலை மாதம் திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், டிஜிட்டல் உரிமத்திற்கான பிரச்சனை இருந்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படம், வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவித்துள்ள கௌதம் மேனன் படத்திற்கான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்தத் தகவலால் சியான் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.





