பல படங்களில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை மிரட்டியவர் நடிகர் பொன்னம்பலம். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய வில்லன் நடிகர் பொன்னம்பலம் கூறியதாவது, நான் ஸ்டண்ட் கலைஞராக இருந்த போது நான் சிவாஜி கணேசனை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் புதிய வானம். சத்யராஜ் தான் ஹீரோ. அப்போது அடையாறில் ஒரு நாள் ஷூட்டிங் நடந்தது.
அப்போது நான் நடந்த போன போது என்னிடம் இருந்த ஒரு ரூபாய் நாணயம் கீழே விழுந்தது. அதை நான் குனிந்து எடுத்தேன். அதை அங்கிருந்த சிவாஜி சார் பார்த்துவிட்டார். டேய் என்னடா அது என்று கேட்டார். நான் ஒரு ரூபாய் நாணயம் என்றேன்.
டேய் இங்க வாடா என்றார். அருகில் போனதும் காட்டுடா என்றார். நானும் அவரிடம் அந்த ஒரு ரூபாயை காட்டினேன். இதுதான் ஒரு ரூபாயா? என்று கையில் வாங்கி பார்த்துவிட்டு அழுதார் சார். என்ன சார் அழுவறீங்க என்று கேட்டதற்கு நான் இதை எல்லாம் பார்த்ததே இல்லைடா என்றார்.
என்னடா இந்த மனுஷன் இப்படி சொல்கிறார்? ஒரு ரூபாயை பார்த்தது இல்லை என்கிறாரே என்று யோசித்தேன். இல்லைடா கேட்டால் காஃபி தரப் போறாங்க. கேட்டால் பிரியாணி தரப் போறாங்க. உண்மையில் நான் பார்த்ததே இல்லைடா என்றார். சார் கிண்டல் பண்றீங்களா? சும்மா நடிக்கறீங்களா என்று கேட்டேன்.
சத்தியமா நான் பார்த்தது இல்லைடா. வேற காசு இருந்தால் காட்டுடா என்கிறார். அப்புறம் நான் போய் 2 ரூபா 5 ரூபா 10 ரூபான்னு எல்லார்கிட்டேயும் இருந்த சில்லறை எல்லாம் வாங்கிட்டு வந்து அவர்கிட்ட கொடுத்தேன். அதை எல்லாம் பார்த்து ரொம்பவும் சந்தோஷப்பட்டார். இதுதான் காசா என்று ஆச்சரியமாக கேட்டார்.
நான் வெச்சுக்கட்டுமாடா என்று கேட்டார். சார் என்ன சார் கிண்டல் பண்ணீட்டு இருக்கறீங்க? வெச்சுக்குங்க சார் நீங்களே என்று சொல்லிட்டேன். சரிடா என்று சொல்லிவிட்டு அவர் போட்டிருந்த கோட் பாக்கெட்டுக்குள் அதை போட்டுக்கொண்டார் என்று அந்த நேர்காணலில் நடிகர் பொன்னம்பலம் கூறியிருக்கிறார்.





