தமிழ் சினிமாவில், ஏற்கனவே நடிகர் சிவக்குமார் மகன் சூர்யா முன்னணி ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். இவரது இயற்பெயர் சரவணன் என்றாலும், சினிமாவில் நடிக்க வந்த போது, சூர்யா என பெயர் மாற்றம் செய்யப்பட்டார். அத்துடன், நடிகர் எஸ்ஜே சூர்யாவும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்.
முதலில் இயக்குநராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த எஸ்ஜே சூர்யா வாலி, குஷி படங்களை இயக்கினார். தொடர்ந்து நடிப்புத் துறையிலும் ஆர்வம் காட்டிய அவர், இப்போது மாஸ் ஆன நடிப்பில், தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து, முன்னணி நடிகராக மாறி விட்டார். விஷாலுடன் எஸ்ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி படம், ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறது.
இதே போல், நடிகர் சூரியும் தமிழ் சினிமாவில் இருக்கிறார். இவரும் காதல், தீபாவளி போன்ற படங்களில் சில நிமிட காட்சிகளில் நடித்து பின், வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டி காட்சியில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்பு சிவகார்த்திகேயனுடன் காமெடி ரோல் செய்து, ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடி நடிகராக மாறினார். இப்போது, வெற்றி மாறன் இயக்கிய விடுதலை படம் மூலமாக, ஹீரோவாகவும் வெற்றி பெற்றிருக்கிறார் சூரி.
இப்படி தமிழ் சினிமாவில் சூர்யா, எஸ்ஜே சூர்யா, சூரி என ஒரே மாதிரியான பெயரில் நடிகர்கள் உள்ள நிலையில், இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் வந்திருக்கிறார். அவர் ஒரு புதிய படத்தில் நடிப்பதோடு, வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதைவிட முக்கியமான ஒரு தகவல், இவர் தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள ஹீரோவின் மகன் என்றால், அதுவும் ஆச்சரியம்தான்.
நடிகர் விஜய் சேதுபதி, ஹீரோவாக – வில்லனாக தமிழ் சினிமாவில் அசத்தி வருகிறார். கமல், ரஜினி, ஷாருக்கான் படங்களில், வில்லன் கேரக்டரில் நடிப்பதோடு, ஹீரோவாகவும் கமிட் ஆகி நடிப்பவர் விஜய் சேதுபதி. இப்போது அவரது மகனும் நடிகராகி விட்டார். அனல் அரசு தயாரித்து, இயக்கும் ஒரு புதிய படத்தில், விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்து வருகிறார். அத்துடன், நடுச்சென்டர் என்ற வெப்சீரிஸ் ஒன்றிலும், சூர்யா நடிக்கிறார். இந்த வெப் சீரிஸ் படப்பிடிப்பு வட சென்னை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்த வெப் சீரிஸ்சில், நடிகர் கலையரசனும் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களை களம் இறக்குவதில், மற்ற சீனியர் நடிகர்களை போலவே, விஜய் சேதுபதியும் தன் மகளை, தமிழ் படங்களில் நடிக்க அனுமதித்து இருக்கிறார். ஆனால், விஜய் சேதுபதி துவக்கத்தில் துணை நடிகராக ரூ. 250 சம்பளத்தில் நடித்தவர். ஆனால், அவரது மகன் முதல் படத்திலேயே ஹீரோவாக கமிட் ஆகி நடிக்கிறார். வெப் சீரிஸ்சிலும் நடிக்கிறார். ஆனால், ஏற்கனவே தமிழ் சினிமாவில் சில சூர்யாக்கள் இருப்பதால், இவரது பெயர் மாற்றப்படுமா, இதே பெயரில் தொடர்வாரா என போக போகத்தான் தெரியும்.





