ராஜ வாழ்க்கை என்ற வார்த்தைகளை சாமானிய மக்கள், வெறும் வார்த்தைகளாக தான் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கும் சினிமா ரசிகர்களால் இன்று சினிமா நடிகர்கள்தான் அப்படிப்பட்ட ராஜ வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.
மலையாள படம் ஒன்றில் அறிமுகமாகி, பின் ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் நயன்தாரா. துவக்கத்தில் ஹீரோவுக்கு ஜோடியாக டூயட் பாடும் கேரக்டர்களில் நடித்த நயன்தாரா, மாயா படத்துக்கு பிறகு தன்னை மையப்படுத்திய கதைகளில் அதிகமாக நடிக்கத் துவங்கினார்.
அப்படிப்பட்ட அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து அறம், இமைக்கா நொடிகள், நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்தார். இதற்கு பிறகு நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நிலையில், அவரது இமேஜ், வேற லெவலுக்கு மாறியது.
ஏழு ஆண்டுகள் காதலித்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்தாண்டில் திருமணம் செய்துகொண்டார் நயன்தாரா. வாடகைத்தாய் மூலம், இரட்டை பிள்ளைகளுக்கு பெற்றோரான இந்த நட்சத்திர தம்பதி, தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக, ஜெட் விமானம் ஒன்றை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. ஷில்பா ஷெட்டி, மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா போன்ற மிகப்பெரிய பாலிவுட் நடிகைகள் மட்டுமே சொந்த விமானம் வைத்துள்ள நிலையில், நயன்தாராவும் இப்போது அந்த வரிசையில் இணைந்துவிட்டார்.
நயன்தாரா பயன்படுத்தும் இந்த தனியார் ஜெட் விமானம், ரூ. 50 கோடி மதிப்புள்ளதாக சொல்லப்படுகிறது. விக்கி – நயன் தங்களது ஜெட் விமானத்தில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. பாலிவுட் நடிகர்களில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி போன்ற நடிகர்களிடம் சொந்த விமானங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கான ரஜினி, கமல், விஜய், அஜீத் கூட சொந்த விமானம் வைத்திருக்காத நிலையில், நயன்தாரா சொந்த விமானத்தில் பறப்பது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.





