சமீபகாலமாக, தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் பலவும், நல்ல வெற்றியை பெற்று வருகின்றன. அதுவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் கூட, மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று, வசூலை குவித்து விடுகிறது.
அதுபோல் பெரிய பட்ஜெட்டில் ரூ. 300 கோடி வரை, செலவிட்டு பிரமாண்டமாக எடுக்கப்படும் படங்களும், பிளாக் பஸ்டர் மூவிகளாக வசூலை குவித்து விடுகின்றன. இது, தமிழ் சினிமாவில் இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் புது நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
லவ்டுடே, வீட்ல விசேஷம், விக்ரம், பொன்னியின் செல்வன், ஜெயிலர், ஜவான், மாவீரன், மாமன்னன், விடுதலை, டாடா, போர்த்தொழில், மார்க் ஆண்டனி, துணிவு, வலிமை போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இனிவரும் லியோ படத்துக்கான வியாபாரமும் அபாரமாக இருக்கும் நிலையில், ரஜினி, கமலின் அடுத்தடுத்த படங்கள் இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் இயக்குநர் அகமது இயக்கத்தில், இறைவன் படம் வெளியானது. த்ரில்லர், ஆக்சன் படம் என்ற நிலையில், இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. தனி ஒருவன் படத்துக்கு பிறகு ஜெயம் ரவி, நயன்தாரா ஜோடி சேருவதால், இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால், படம் வெளியான அன்றே படத்துக்கான ரசிகர்களின் விமர்சனம் மிக ஏமாற்றமாக அமைந்தது. பலவிதங்களில் இந்த படம், ரசிகர்களை அதிருப்தியடைய செய்தது. குறிப்பாக, படத்தின் கதை சமீபத்தில் வெளியான போர்த்தொழில் படம் போலவே இருப்பதாக, கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவெனில், இந்த படத்தில் நடித்த ஹீரோயின் நயன்தாராவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 8 லட்சம் ரூபாய் தந்தால் நடிக்கக் கூடிய, ஒரு சாதாரண நாயகிக்கான கேரக்டர் மட்டுமே நயன்தாராவுக்கு இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா நடிக்க வேண்டிய அவசியமே இல்லாத நிலையில், இப்படியும் தயாரிப்பாளருக்கு, இறைவன் சோதனை காட்டியுள்ளாரே என, ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.





