திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இவரது இயக்கத்தில் வெளிவர உள்ள லியோ படம் குறித்த அப்டேட்டுகளால் கடந்த ஒரு மாதமாக, சமூக வலைதள பக்கங்கள் நிரம்பி வழிகின்றன. விஜய் குறித்தும், லியோ படம் குறித்தும் சர்ச்சையான விஷயங்களும், விமர்சனங்களும் அடுத்தடுத்து வந்தபடியே இருக்கின்றன.
எனினும், சர்ச்சைகள் விமர்சனங்களை கடந்து லியோ படம் குறித்த அப்டேட்களை, மக்கள் ஆர்வமாக ஷேர் செய்து வருகின்றனர். ஏறக்குறைய 50 மில்லியன் பார்வையாளர்களை, லியோ டிரெய்லர் கடந்துள்ளது. லியோ படத்துக்கான பரீ டிக்கெட் புக்கிங் பல கோடிகளை கடந்துள்ளது. லியோ ரிலீஸான ஓரிரு தினங்களிலேயே 100 கோடி ரூபாய் இலக்கை வசூல் கடந்துவிடும் என்றும் பேசப்பட்டு வருகிறது.
லியோ படம் ரிலீஸாக உள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக படத்தின் பிரமோசனுக்காக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து, யூடியூப் சேனல்களில் நேர்காணல் தந்து வருகிறார். அதில் தனது சினிமா பயணம் குறித்த பல தகவல்களை பகிர்ந்து வருகிறார். அதில் பல சுவாரசியமான விஷயங்களையும் தெரிவித்து இருக்கிறார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள கிணத்துக்கடவு தான் எனது சொந்த ஊர். அப்பா பஸ் கண்டக்டர். அம்மா இல்லத்தரசி. என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். பள்ளியில் படிக்கும் காலத்தில் நான் சினிமா சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டியது இல்லை. அந்த காலகட்டத்தில் ஸ்கிரிப்ட் எழுதுவது, நாடகம் போடுவது போன்ற செயல்பாடுகள் என்னிடம் இல்லை.
கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில், கணக்கு இல்லாத பாடப்பிரிவாக தேர்வு செய்ய வேண்டும் என நினைத்து, பேஷன் டெக்னாலஜி எடுத்து படித்தேன். அப்போது, ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் குறும்படங்கள் எடுத்தேன். குறும்படல் திரையிடல் நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என்னை பாராட்டினார். நிறைய விஷயங்களை, திறமைகளை வைத்துள்ள நீங்கள், விட்டுவிடாதீர்கள். இதைத் தொடருங்கள் என அறிவுறுத்தினார்.
நான் ரயில், விமான பயணங்களை விரும்புவதில்லை. ரோடு வழியாக காரில் பயணிப்பதையே விரும்புவேன். டிரைவர் காரை ஓட்ட, நான் ஸ்கிரிப்ட் எழுதியபடியோ, காரில் இருக்கிற பெரிய ஸ்கிரீனில் படம் பார்த்தபடியோ செல்வேன். கடந்த ஆறு மாதமாக பாக்ஸிங் (குத்துச்சண்டை) பயிற்சிக்கு சென்று வருகிறேன். காஷ்மீரில்தான் முதலில் பயிற்சி எடுத்தேன். லியோ பட வேலைகளால், கடந்த ஒரு மாதமாக பயிற்சிக்கு செல்ல முடியவில்லை. நிச்சயம் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துக்கொள்வேன் என்று கூறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.





