தமிழ் சினிமாவில், அவ்வப்போது டிரண்டிங் மாறிக்கொண்டே இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் கரகாட்டக்காரன் படம சக்சஸ் ஆன போது, தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு கிளைமாக்ஸில் வேப்பிலை பாட்டு இல்லாத படங்களே இல்லை என்று ஆனது. 1980 களில் எடுக்கப்பட்ட படங்களில், தந்தையை கொன்ற வில்லனை பழிவாங்குவதே ரஜினி, கமலுக்கு முக்கிய வேலையாக இருந்தது.
ஒரு கட்டத்தில் படத்தின் பாதி வரை, ஹீரோவை இன்சல்ட் செய்யும் ஹீரோயின், இடைவேளைக்கு பிறகு திருந்தி, ஹீரோவை காதலிப்பதே வழக்கமாக இருந்தது. ஹீரோயினை திருத்துவதே, அந்தப்படங்களில் ஹீரோக்களின் கடமையாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் பேய் படங்களாக வந்தன.இப்படி தமிழ் சினிமாவில் சில சீசன்கள் மாறி மாறி வந்துக்கொண்டே இருக்கிறது.
இப்போது புதிய டிரண்டிங் ஒன்று தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறது. அது, நான்கைந்து ஹீரோக்களை ஒரே படத்தில் நடிக்க வைப்பது. இந்த ஜானர், விக்ரம் படத்தில் முதன் முதலாக, லோகேஷ் கனகராஜ் துவக்கி வைக்க, சூர்யா ரோலக்ஸ் கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு வாரிசு படத்தில், இதே போல் நட்சத்திர கூட்டம், ஜெயிலர் படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் என நடித்தனர். லியோ படத்திலும் மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் என ஒரு நட்சத்திரக் கூட்டம் நடித்திருக்கிறது.
ஒரு படத்தில் நான் நடித்தால், ஹீரோவாக அல்லது படம் முழுக்க வரும் கேரக்டராக மட்டுமே நடிப்பேன் என்று நிலை மாறி, இப்படி பிரபல நடிகர்கள் நடிப்பது அவர்களுக்கான பல கோடி சம்பளத்துக்காக தான், சில நிமிட காட்சிகள் என்றால், பல கோடி சம்பளம். இப்போது விஜய் 68 படத்திலும் அதே போல் நட்சத்திர கூட்டம். பிரபுதேவா, பிரசாந்த்,மைக் மோகன், ஜெயராம் என இதிலும் நட்சத்திர கூட்டம்தான். ரஜினி 170 படத்திலும், அமிதாப் பச்சன் நடிப்பது உறுதியாகி உள்ளது.
இப்படி ஒரு படத்தில், எதற்கான இத்தனை நட்சத்திர நடிகர்கள் என்றால், அதில்தான் படத்தின் வெற்றியும், பல நூறுகோடி ரூபாய் வசூலும் அடங்கி இருக்கிறது. அதாவது, பெரிய ஸ்டார்களின் படம், பல நூறு கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். அதுவும், ஆயிரம் கோடி ரூபாய் என்பதுதான் இலக்கு. அதை அடைய எளிய வழி, ஸ்டார் நடிகர்களை எல்லாம் ஒரு படத்தில் நடிக்க வைத்து காட்டுவதுதான்.
இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தமிழில் பல மொழி நாயகன்கள் நடித்தாலும், தமிழ் ஹீரோ செல்வாக்கு, தமிழ் சினிமா ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கும். அந்தந்த மொழிகளில் அந்த படம் ரிலீஸ் ஆகும்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அந்தந்த மொழி ரசிகர்களும் தங்கள் அபிமான நடிகரை காண தியேட்டர்களுக்கு படையெடுப்பர். எனவே, ஒரே கல்லில் ஐந்து மாங்காய், ஆறு மாங்காய் அடிக்கும் ஒரு புது டெக்னிக் தான், ஸ்டார் வேல்யூ படங்கள்.
நட்சத்திர நடிகர்களை காட்டி, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் இந்த டிரெண்டிங்கில் பல நூறுகோடிகளை வசூலித்துவிட்டு கதை பிரமாதம், டைரக்ஷன் அருமை, இசை சூப்பர், நடிகர் நடிப்பு வேற லெவல் என பொய் பொய்யாக பிரசாரம் செய்து, பிளாப் ஆக வேண்டிய படங்களை, தூக்கி பிடித்துக் கொண்டாடுவது, தமிழ் சினிமாவில் இப்போது நடந்து வருகிறது. இந்த டிரண்டிங், நிச்சயமாக வரும் காலத்தில் மாறும். ரசிகர்களுக்கு போரடிக்கும் வரை, இந்த ஜானரில் இயக்குநர்கள், நடிகர்களின் பயணம் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.





