பிக்பாஸுக்கென்று தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. முதல் சீசனில் கொடுக்கப்பட்ட வரவேற்பு அடுத்தடுத்த சீசன்களில் குறைந்தாலும் கடந்த சீசன் பரபரப்பாகவும் பஞ்சாயத்தாகவும் நகர்ந்தது. அதற்கு காரணம் அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் என்பதுதான் கவனிக்கத்தக்கது.
சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கடந்த சீசன் போல் இந்த சீசனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குகிறார். மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா, அக்ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர்தான் அவர்கள்.
இந்த சீசனில் கலந்துகொள்வார்கள் என்று பப்லு, சோனியா அகர்வால் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் அவர்கள் கடைசியில் கழன்றுவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது உள்ளே சென்றிருப்பவர்களில் கூல் சுரேஷ், யுகேந்திரன் தவிர்த்து மற்றவர்கள் பெரிதான பிரபலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். சென்ற உடனே அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அடுத்து வருபவரை கன்வின்ஸ் செய்தால் மட்டும்தான் இந்த கேப்டன் பதவி நிலைக்கும் என பிக்பாஸ் கூற அதில் கூல் சுரேஷ் தவறிவிட்டார். எனவே அடுத்தடுத்தவர்களிடம் மாறி கடைசியாக விஜய் வர்மாவிடம் கேப்டன் பதவி தற்போது இருக்கிறது.
பிக்பாஸ் வீட்டுக்குள் கூல் சுரேஷ் ஒரு ஃபன் மெட்டீரியலாகவே சக போட்டியாளர்களால் பார்க்கப்படுகிறார். காலையில் எழுந்து அவர் உடற்பயிற்சி செய்வது, பிறகு அவர் சொல்லும் பஞ்ச்சுக்கள் என அனைத்தையுமே பெரும்பாலனவர்கள் கலாய்க்கிறார்கள். நேற்று பவா செல்லதுரை சொல்லிய கதையை கேட்டு கூல் சுரேஷ் எமோஷனலானது ஒரு பக்கம் நடந்தது.
இந்நிலையில் ஏற்கனவே பிக்பாஸ் பற்றி கூல் சுரேஷ் பேசியது ட்ரெண்டாகியுள்ளது. செய்தியாளர்களிடம் அதுகுறித்து பேசிய அவர், “என்னயா பெரிய பிக்பாஸ். சின்ன புள்ளைங்கள கூட்டிட்டு அந்து அரைகுறையா ட்ரெஸ்ஸா போட்டுவிட்டு காலைல பாட்டுக்கு கண்டபடி ஆட விடுறதுதான் பிக்பாஸா” என கேட்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஏங்க கூல் சுரேஷ் இப்படி கழுவி கழுவி ஊத்திட்டு இப்போ ஏன் பிக்பாஸுக்குள் போனீங்க என கேள்வி கேட்டுவருகின்றனர்.





