- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் வில்லனாக ரசிகர்களை மிரட்ட வரும் சத்யராஜ், அவருடன் மோதப் போகும் ஹீரோ யாரு தெரியுமா...

மீண்டும் வில்லனாக ரசிகர்களை மிரட்ட வரும் சத்யராஜ், அவருடன் மோதப் போகும் ஹீரோ யாரு தெரியுமா – படம் பட்டைய கௌப்ப போகுதுங்க

- Advertisement -

நடிகர் சத்யராஜ், ஒரு காலகட்டத்தில் புரட்சி தமிழன் என அழைக்கப்பட்டவர். தமிழக அரசியலை நையாண்டி செய்து, மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை தான், தமிழ் அரசியல் படங்களுக்கு முன்னோடி என்று சொல்லலாம். ஹீரோ – வில்லன் என இந்த படத்தில் இரண்டு கேரக்டர்களிலும் நல்ல நடிப்பை தந்திருந்தார் சத்யராஜ்.

தமிழ் சினிமாவில், ஆரம்பத்தில் வில்லன் கேரக்டர்களில்தான் சத்யராஜ் அறிமுகமானார். ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பிரபல ஹீரோக்களுக்கு மெயின் வில்லனாக நடித்தவர் சத்யராஜ். அதுவும் அவரது கொடூரமான பார்வையும், எகத்தாளமான பேச்சும், அடாவடியான உடல்மொழியும் ரசிகர்களை எளிதில் அவர் வசப்படுத்தியது. காக்கிச்சட்டை படத்தில் ‘தகடு தகடு’ டயலாக், அன்றைய தமிழ் சினிமாவில் செம டிரண்டிங் வசனமாக இருந்தது. முதல் வசந்தம் படத்தில், குங்கும பொட்டுக் கவுண்டராக நடிப்பில் சத்யராஜ் அதகளம் செய்திருப்பார்.

வில்லனாக நடித்து, பின் நாளடைவில் ஹீரோவாக அவரை மாற்றியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அவரது இயக்கத்தில் கடலோர கவிதைகள் படத்தில், முட்டம் சின்னப்பதாஸ் என்ற முரட்டு ரவுடி கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் மனதில் ஹீரோ வாக உயர்ந்தார். அதன்பிறகு கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஜீவா, பூவிழி வாசலிலே, மந்திரப்புன்னகை, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படங்களில் நடித்து, தனது ஹீரோ இமேஜை மேலும் உயர்த்திக் கொண்டார்.

பிறகு பல படங்களில் தொடர்ந்து ஹீரோவாக நடித்த சத்யராஜ், அமைதிப்படை படத்தில் ஹீரோ, வில்லன் என தந்தை – மகன் கேரக்டரில் அசத்தி, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றார். திருமதி பழனிசாமி, ரிக்‌ஷா மாமா, பிரம்மா, பங்காளி என பல படங்கள் அவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த உயரங்களை எட்ட மிகவும் உதவியது. சத்யராஜ் படங்கள் என்றாலே, ஜாலியாக இருக்கும் என்று, பொழுதுபோக்கான அவரது படங்கள் பெரிய வெற்றிகளை பெற்றது.

ஒரு கட்டத்துக்கு பிறகு அப்பா, அண்ணன், மாமா மற்றும் போலீஸ் அதிகாரி போன்ற கேரக்டர்களில் சத்யராஜ் நடிக்க துவங்கினார். ஹீரோவுக்கான கதைகளில் அவர் பொருந்தாத நிலையில், அடுத்து குணச்சித்திர நடிகராக தன்னை மாற்றிக் கொண்டார் என்றாலும், அவருக்கான முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில், அத்தகைய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தார். அதில், பாகுபலி கட்டப்பா கதாபாத்திரம், பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இப்போது மீண்டும் வில்லனாக, சத்யராஜ் ஒரு படத்தில் நடிக்கிறார். ராஜூ முருகன் இயக்கத்தில் தற்போது ஜப்பான் படத்தில் நடித்துள்ள கார்த்தி, அடுத்து நலன் குமாரசாமி இயக்கும் ஒரு பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். இது, கார்த்திக்கு 26வது படம். படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிடைந்த நிலையில், இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் சத்யராஜ் நடிப்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே தம்பி, கடைக்குட்டி சிங்கம் படங்களில் கார்த்திக்கு தந்தையாக நடித்த சத்யராஜ், இதில் வில்லனாக அவருடன் மோதுகிறார் என்பது, குறிப்பிடத்தக்கது.

சற்று முன்