விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்த லியோ படம், இன்னும் 5 நாட்களில், அதாவது வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. 19ம் தேதி இரண்டு சிறப்பு ரசிகர் காட்சிகளும், 24ம் தேதி வரை காலை ஒரு சிறப்பு ரசிகர் காட்சியும் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட உற்சாகத்தில் இருக்கின்றனர். பீஸ்ட், வாரிசு படங்கள் தந்த பலத்த ஏமாற்றத்துக்கு பிறகு, வெளியாகும் படம் என்பதால் லியோ படத்துக்கான வரவேற்பும், ஆரவாரமும் மிக மிக அதிகமாக ரசிகர்களிடையே காணப்படுகிறது. வெறித்தனமாக, விழா போல லியோ படத்தை கொண்டாடி மகிழ ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
விஜய் ரசிகர்கள் இப்படி ஒரு கொண்டாட்டத்தில் இருக்க, அஜீத்குமார் ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் சோர்வடைந்து காணப்படுகின்றனர். ஏனென்றால் துணிவு படத்தை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்கி இருக்கிறார் நடிகர் அஜீத்குமார்.
அஜர்பைஜானில், கடந்த 10 நாட்களாக விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனியின் பிறந்த நாள், படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியதற்கான புகைப்படங்கள் கூட வெளியாகவில்லை.
இப்படி படம் பற்றிய எந்த தகவலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதுவுமே வெளியாகாத நிலையில், அஜீத்குமார் ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர். லியோ குறித்த அப்டேட் அடிக்கடி வெளியாகி, வைரலாகி வரும் நிலையில், விடாமுயற்சி படம் பற்றிய அப்டேட் எதுவுமே இல்லாதது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
அஜீத் நடிக்கும் படங்களை பொருத்தவரை அவரது அனுமதி இன்றி எந்த விஷயமும் வெளியே வராது. அவரது அனுமதி, சம்மதம் இருந்தால் மட்டுமே புகைப்படமோ, படம் பற்றிய விஷயங்களோ வெளியே வர வாய்ப்புள்ளது என்ற தகவலை, செய்யாறு பாலு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.





