தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லும் விஜய், அரசியல் களத்தில் தீவிரம் காட்டி வருகிறார். அதே நேரத்தில் ஆளும்கட்சி திமுக குறித்தும் பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இப்போது ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர் போராட்டத்துக்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு எந்திரத்தின் நிர்வாக முறை அச்சாணியான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதற்கான நியாயமான தீர்வுகளை காண வேண்டியது அரசின் கடமை.ஆனால் அதை இப்போது இருக்கும் திமுக அரசு செய்ய முன்வரவில்லை.
கண்துடைப்புக்காக வெறும் பேச்சுவார்த்தை மட்டும் நடத்திவிட்டு கண்டும் காணாமல் கைவிட்டு விட்டது. தேர்தலுக்காக மட்டும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பை கெஞ்சி கூத்தாடியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் என்றும் கூறி நம்பிக்கை ஏற்படுத்திவிட்டு இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல், லட்சக்கணக்கான குடும்பங்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டமானது ராஜஸ்தான் மேற்கு வங்காளம் ஜார்கண்ட் சத்தீஸ்கார் பஞ்சாப் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசும் அதை மீண்டும் கொண்டு வரப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளது. எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறோம் என்று மார் தட்டும் திமுக அரசு இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்?
திமுக அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் விடுமுறை நாளிலும் போராட்ட களத்தில் உள்ளனர். இது மிகப்பெரிய கையறு நிலையாகும். தற்போதைய ஆளும் திமுக அரசுக்கு இது ஒரு பொருட்டாகவே படவில்லை என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது.
இது போன்ற பாராமுகம் செயல்களால் அரசு மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து கையறு நிலையில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன்களை ஆழமாக மனதில் வைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்துக்கு தமிழக வெற்றிக்கழகம் முழுமையான மனப்பூர்வமான ஆதரவை வழங்குகிறது என்று நடிகர் விஜய் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.





