இந்த இயக்குநர் படத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் என பல நடிகர், நடிகையர் தங்கள் அபிமான இயக்குநர் பெயர்களை கூறுவதை பல நேரங்களில் பார்க்க நேர்கிறது. டிவி சேனல், சமூக வலைதளங்களில் பேட்டி காணும் செய்தியாளர்களிடம், இந்த இயக்குநர் படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று பலரும் கூறுகின்றனர். அதே போல், இயக்குநர்களும் குறிப்பிட்ட சில நடிகர்களை வைத்து படம் இயக்க விரும்புவதாகவும் இதே போல் கூறி வருகின்றனர்.
ஆனால், இங்கே ஒரு இயக்குநர் இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆன நிலையில், திடீரென அந்த படத்தின் கதாநாயகி, இந்த இயக்குநர் படத்தில் நடிக்க விருப்பமில்லை என விலகினார். இதைத்தொடர்ந்து படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆன நடிகரும், வேண்டாம் இந்த இயக்குநர் என்றால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை, ஒதுங்கிக்கொள்கிறேன் எனக் கூறியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பெருமைக்கு சொந்தக்காரர், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பரும், மேயாத மான் படத்தின் இயக்குநருமான ரத்னக்குமார்தான். ரத்னகுமார் டைரக்ட் செய்யும் படத்தை, லோகேஷ் கனகராஜ்தான் தயாரிக்கிறார். அந்த படத்தில் நடிக்க ஹீரோவாக ராகவா லாரன்ஸ், ஹீரோயினியாக நடிக்க நயன்தாராவும் கமிட் செய்யப்பட்டனர்.
ஆனால், சில நாட்களில் இந்த படத்தில், குறிப்பாக இந்த இயக்குநரின் நடிக்க விரும்பவில்லை என்று வெளிப்படையாக சொல்லிவிட்டு, நயன்தாரா படத்தில் இருந்து விலகிவிட்டார். ஜவான் படத்தின் மெகா வெற்றியை அடுத்து, இந்த முடிவை அவர் எடுத்ததால், பாலிவுட் நாயகியாக மாறியபின், இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என அவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்த மாஸ்டர் ராகவா லாரன்ஸ்சும் இப்போது, ரத்னக்குமார் இயக்கம் என்றால் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன். வேறு இயக்குநரை மாற்றினால், நடிக்கிறேன். இல்லை என்றால் வேண்டாம் என்று மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. லாரன்ஸ் மாஸ்டரின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை என்று, படக்குழுவினர் குழம்பி போயுள்ளனர்.
ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால், இயக்குநரை மாற்ற வேண்டும். ஆனால், படத்தின் தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் தனது ;நண்பர் ரத்னக்குமாரை நிச்சயம் விட்டுத்தர மாட்டார். ஆனால், லாரன்ஸ் தன் முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். நடிகர் மாற்றப்படுவாரா, அல்லது இயக்குநர் மாற்றப்படுவாரா என்ற நிலையில், என்ன நடக்கப் போகிறது என்பதை கோலிவுட் வட்டாரம் ஆவலாக பார்த்துக்கொண்டு இருக்கிறது.





