மலையாள நடிகர் விநாயகன், சமீபத்தில் ஜெயிலர் படத்தில் வர்மன் கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர். ரஜினிக்கு வில்லனாக ஒரு நடிகர் நடித்தால், நிச்சயம் அவர் எல்லா தரப்பு ரசிகர்களாலும் கவனிக்கப்படுவார். அப்படி ரசிகர் கவனம் ஈர்த்தவர் விநாயகன்.
அதுமட்டுமின்றி, ஜெயிலர் படத்தில் வர்மன் கேரக்டரில் விநாயகன் நடிப்பு மிக அட்டகாசமாக, மிரட்டலாக இருந்தது. சிலை கடத்தல் மன்னனாக வரும் அவரது நடிப்பில் உள்ள ஆணவமும், மிரட்டலும், அலட்சியமும், திமிரும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு, விநாயகனின் வில்லத்தனமாக நடிப்பும் மிக முக்கிய காரணம்.
ஜெயிலர் படம் மட்டுமின்றி, ஏற்கனவே சில தமிழ் படங்களில் விநாயகன் நடித்திருக்கிறார். தருண்கோபி இயக்கிய திமிரு படத்தில், மாற்றுத்திறனாளி கேரக்டரில் வில்லன் குரூப்பில் அடியாளாக இருப்பார். சிலம்பாட்டம், மரியான் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஆனால், ஜெயிலர் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.
மலையாள நடிகரான இவர், சிறந்த நடனக் கலைஞர். மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். கம்மாட்டி பாடம் என்ற மலையாள படத்தில் சிறப்பான நடிப்பை தந்ததற்காக, கேரள அரசின் சிறந்த நடிகர் விருது பெற்றவர் விநாயகன். இப்போது, மலையாள படங்களில் கமிட் ஆகி நடித்து வருபவர்.
இந்நிலையில், நடிகர் விநாயகன் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டில், இவர் அடிக்கடி பிரச்னை செய்வதாக கூறி, எர்ணாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க, நேரில் ஆஜராகும்படி எர்ணாகுளம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
நேற்று, மதுபோதையில் எர்ணாகுளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த நடிகர் விநாயகன், அங்கு இருந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்து, ரகளையில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்துக்கு பிறகு பொறுமை இழந்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விநாயகனை கைது செய்தனர். அவரை மருத்துவ பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது, மலையாள சினிமாவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





