கூழாங்கல் படத்தின் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சூரி மற்றும் அன்னாபென் நடிப்பில் உருவான படம் கொட்டுக்காளி. பின்னணி இசை இல்லாத இந்த படத்தை சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன், படக்குழுவினருடன் பார்த்திருக்கிறார். படம் குறித்து தனது எண்ணங்களை அறிக்கையாக பதிவு செய்திருக்கிறார்.
அதில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, கொட்டுக்காளி என்ற மத்திய அரசின் சான்றிதழ் தோன்றும் கணத்தில் இருந்தே ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. படத்தின் மொத்த நேரம் 103 நிமிடங்கள், 44 விநாடிகள்தான். இந்த குறிப்பை பார்த்ததுமே தமிழ் சினிமா ராக் யுகத்தில் இருந்து மீண்டு நவீன கதை சொல்லி ஒருவனின் களமாகி விட்டது என்று புரிகிறது.
தம்பி சூரியை தவிர எனக்கு தெரிந்த முகங்கள் இல்லை. மூன்று நிமிடங்களுக்கு பிறகு அவரும் தெரியவில்லை. பாண்டியன் என்ற கதாபாத்திரம்தான் தெரிந்தார். காலில் கல் கட்டிய சேவல் ஒன்று விடியலுக்கு கூட கூவாமல் குழம்பி நிற்கிறது. மறுபுறம் நம் கண்ணுக்கு தெரியாத கல் ஒன்று காலில் கட்டப்பட்ட பெண் ஒருத்தி அந்த சேவலையே வெறித்துப் பார்க்கிறாள்.
கிராமம் என்றால் சிமென்ட் சாலை, வாகன வசதி, செல்போன், டாஸ்மாக், சானிட்டரி நாப்கின், 24 மணி நேர மின்சாரம் என 21ம் நூற்றாண்டின் நவீன வசதிகள் நிறைந்த கிராமம், இருந்தாலும் எங்க வீட்டு பிள்ளைக்கு போய் பிடிச்சிருக்கு, பேய் ஓட்ட கூட்டிப் போறோம் என விசாரிப்பவர்களிடம் கூசாமல் சொல்கிறான் பாண்டியன், அதை வழிமொழிகிறது குடும்பம்.
இது பேய் கதைதான். காதல் பேய் கதை. நாயகியின் கண்ணின் பூமியின் பொறுமை தெரிகிறது. பின்னணி இசை என்று எதுவும் இல்லை. டைட்டில் கார்டில் வரும் இயற்கைக்கு நன்றி என்ற வாசகத்தின் பொருள் ஒளிப்பதிவிலும், ஒலிப்பதிவிலும் தெரிகிறது. இயற்கைதான் படத்தின் இசை.
ஆணாதிக்கத்தின் குறியீடுகளாக சேவல், சீறும் காளை, பாண்டியன், பூசாரி என்று பலர் இருந்தாலும் அவற்றை நாயகி எதிர்கொள்ளும் விதம் காலம் மாறிவிட்டதை மற்ற பாத்திரங்கள் புரிந்து கொள்ளாவிடினும் பார்வையாளர்களாகிய நமக்கு படம் பிடித்து காட்டப்படுகிறது என்று, கமல்ஹாசன் அந்த பதிவில் கூறியிருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் இந்த அளவுக்கு படத்தை விவரித்து எழுதுகிறார் என்றால் விடுதலை, கருடன் வெற்றிப் பட வரிசையில் சூரிக்கு கொட்டுக்காளி படத்துக்கும் நிச்சயம் இடம் கிடைக்கும்.





