நடிகர் விஜய், சினிமாவில் உச்சம் தொட்ட பெரிய நடிகரான நிலையில் இனி, அவரது கவனம் அரசியல் பக்கம் திரும்புகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே, தனது ரசிகர் மன்றங்களை எல்லாம் இணைத்து, விஜய் மக்கள் இயக்கம் என அமைப்பாக மாற்றியதன் நோக்கமே இதுதான் என்பது தெளிவாகிறது.
விஜய் தற்போது, வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்க விஜய் பெறும் சம்பளம் 200 கோடி ரூபாய். தமிழ் நடிகர்களில் ரஜினிகாந்த் பெறும் சம்பளம் ரூ. 120 கோடி, கமல் பெறுகிற சம்பளம் ரூ. 150 கோடி என்ற நிலையில், விஜய் வேற லெவலில் இருக்கிறார்.
சமீபத்தில் வெளியான லியோ படத்தின் வெற்றிவிழா நடந்தது. இதில் பேசிய விஜய், வெளிப்படையாகவே தனது அரசியல் ஆசை இருப்பதை வெளிப்படுத்தி விட்டார். காட்டுக்குள் வேட்டையான போன இருவர் குறித்து சொன்ன குட்டிக் கதையில் காட்டுக்குள் கழுகு, முயல் இருந்தாலும் யானையை குறிவைப்பதே முக்கியம் எனக் கூறினார். அதாவது அரசியலே பிரதானம் என்கிறார்.
மேலும், எப்போதும் எளிதில் வெற்றி பெறுகிற ஒன்றுக்காக நாம் ஆசைப்படக் கூடாது. வெற்றி பெறவே முடியாத ஒன்றின் மீதுதான் நாம் ஆசைப்பட வேண்டும். அதற்காக போராட வேண்டும். அதுதான் முக்கியம் என்பதையும் அறிவுரையாக கூறி, அரசியல்தான் எளிதில் வெற்றி கிடைக்காத ஒன்று. சினிமாவில் சாதிப்பது ஒன்றும் ரொம்ப முக்கியம் அல்ல என்பதையும் தெளிவுபடுத்தினார்.
லியோ இசை வெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்கவில்லை. வெற்றி விழாவும் அவசரமாக நடத்தப்பட்டது. எனவே தனது ஒட்டுமொத்த ரசிகர் கூட்டத்தையும் சந்திக்க விதமாக ஒரு பெரிய சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளார் விஜய். இதில் தனது ரசிகர்களின் பெருங்கூட்டத்தை அரசியல் கட்சிகளுக்கு காட்டவும், தனது பலத்தை நிரூபிக்கவும் விஜய் முடிவு செய்திருக்கிறார்.
வரும் 2024 பொங்கல் பண்டிகை நாட்களில் இந்த ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியை, அரசியல் கட்சி மாநாடு போல பெரிய அளவில் நடத்த, இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. மதுரை அல்லது திருச்சி என்பது விஜயின் விருப்பமாக உள்ளது. மதுரையில்தான் விஜயகாந்த், கமல்ஹாசன் தங்களது கட்சியை அறிவித்தனர். அதே போல், மதுரையில் விஜய் இந்த மாநாடு கூட்டத்தை நடத்தவும் அதிக வாய்ப்புள்ளது. இதில் மன்ற நிர்வாகிகள் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் விஜய் முடிவு செய்திருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.





