இயக்குநர் அட்லி ராஜா ராணி படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜெய் – நயன்தாரா, ஆர்யா – நஸ்ரியா என இரண்டு காதல் ஜோடிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம், பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக நயன்தாராவுக்கு அப்பாவாக நடித்த சத்யராஜ் கேரக்டரும் சிறப்பாக இருந்தது.
தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்க்கு ஹிட் படங்களை கொடுத்த அட்லி, தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக முன்னேறினார். தமிழில் இருந்து அட்லி, திடீரென இந்திக்கு போனார். அங்கு பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கினார்.
அந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக, இந்தியில் முதன்முறையாக நயன்தாரா நடித்தார். தீபிகா படுகோனே, யோகிபாபு, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த இந்த படம், 23 படங்களில் காப்பி என விமர்சிக்கப்பட்டது. ஆனால் படத்தின் வசூல், 1150 கோடி ரூபாயை கடந்து சாதனை படைத்தது.
இந்நிலையில் விஜய் 68 படத்தில் நடித்து வருகிறார். அடுத்து விஜய் 69 படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக கூறப்படுகிறது. எனவே விஜய் 70வது படம் அட்லி இயக்குவதாக முடிவு ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் விஜய், ஷாருக்கான் இணைந்து நடித்தால் ரூ. 3000 கோடி வசூலாகும் என அட்லி, ஒரு நேர்காணலில் கூறி இருந்தார்.
இதற்கிடையே இப்போது, அட்லி இயக்கத்தில் மீண்டும் ஷாருக்கான் நடிப்பது முடிவாகி உள்ளது. இந்த படத்தின் கதை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. படத்தில் நடிக்கும் கேரக்டர்கள், அதில் நடிக்க வேண்டிய நடிகர்கள் குறித்தும் ஷாருக்கான், அட்லி கலந்து பேசி வருகின்றனர். மீண்டும் இந்த படத்தில் நயன்தாரா நடிப்பாரா அல்லது பாலிவுட் முன்னணி நாயகிகளில் ஒருவரை நடிக்க வைக்கலாமா எனவும் பேச்சு நடக்கிறது.





