நடிகை தீபா, பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மெட்டி ஒலி சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து சரவணன் மீனாட்சி, வாணி ராணி, கோலங்கள், பூவா தலையா, செந்தூரப்பூவே, பாரதி கண்ணம்மா, லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற பல முக்கிய சீரியல்களில் நடித்தவர் தீபா என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவிலும் நிறைய படங்களில் தீபா குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக மாயாண்டி குடும்பத்தார் படத்தில் மணிவண்ணன் மகளாக, ராஜ்கபூர் மனைவியாக நடித்திருப்பார். தம்பிக்காக நடுரோட்டில் விழுந்து புரண்டு பரமா, பரமா என அவர் அழும் காட்சி, பெண்கள் மத்தியில் பலத்த கவனத்தை ஈர்த்தது. அந்த உணர்ச்சிக்கரமான நடிப்பில் ஒரு சகோதரியின் உணர்வுகளை அப்படியே காட்டியிருந்தார் நடிகை தீபா.
அதே போல் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து காமெடி நடிகையாக அசத்தியிருந்தார். கடைக்குட்டி சிங்கம் படத்தில், கார்த்தியின் சகோதரிகளில் ஒருவராக அற்புதமாக நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வருகிறார். குக் வித் கோமாளி சீசன் 2ல், ஒரு போட்டியாளராக பங்கேற்று இருந்தார் தீபா.
சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற தீபா, குழந்தைகள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து பேசியது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் குழந்தைகளின் தாய்மார்களையே அவர் குற்றம் சாட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் நடிகை தீபா பேசியதாவது, உன் புள்ளை பெருசா, என் புள்ளை பெருசா என்ற தாய்மார்களின் பொறாமையால், குழந்தைகளின் குழந்தை தன்மையையே மறக்கடிக்கிறார்கள். அவர்கள் மீது தங்களது ஆசைகளை திணிக்கின்றனர். தாய்மார்களின் பொறமைத்தன்மையை குழந்தைள் மீது திணிக்க கூடாது. டிவியில் டான்ஸ் ஆட, பாட்டு பாட குழந்தைகளை தாய்மார்கள் அழைத்து வருகின்றனர்.
அப்போது அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அந்த குழந்தைகளை சித்ரவதை செய்கிறார்கள். அதை என் கண்ணால் பார்த்தேன். இதனால் குழந்தைகளின் மனநிலையே பாதிக்கப்படும். திறமை இருந்தால் அந்த குழந்தை தானாக ஆடும். பாடும். குழந்தையின் திறமை தானாக வெளிப்படும். குழந்தைகள் உங்கள் கையில் கிடைத்திருக்கும் குரங்கு பொம்மையல்ல. நீங்கள் சொல்வது போல ஆடுவதற்கு. தயவு செய்து புரிந்துக்கொள்ளுங்கள் என்று தீபா பேசியிருக்கிறார்.





