நடிகர் கோபி நயினார், அறம் படம் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற ஒரு இயக்குநர். மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகளில் சிறுவயது குழந்தைகள் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, அறம் படத்தை இயக்கி இருந்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த கருத்தை மையப்படுத்தி இந்த படத்துக்கு பல விருதுகள் கிடைத்தது.
அறம் படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்த நயன்தாராவுக்கும் சிறந்த நடிப்பை வௌிப்படுத்த முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் கிடைத்தது. அதாவது அதிகார மையத்தில் இருப்பவர்கள் ஒரு பிரச்னையை தீர்க்க, அதிகாரிகளாக முடிெவடுக்க முடியாமல் அங்கு நடக்கும் அரசியலில் எப்படி சிக்கி தவிக்கிறார்கள் என்பதும் படத்தில் சரியாக காட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கோபி நயினார் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்த கருப்பர் நகரம் என்ற படம் எடுக்கப்பட்டு வந்தது. இதில் ஜெய்க்கு நல்ல கேரக்டர் என்றும், இந்த படமும் இயக்குநர் கோபி நயினாருக்கு, அறம் படம் போல ஒரு பெயர் சொல்லும் முக்கிய படமாக இருக்கும் என்றும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெருமையாக பேசப்பட்டது.
சமீபத்தில் ஜெய் நடிப்பில், அருண்ராஜ் காமராஜ் இயக்கத்தில் உருவான லேபிள் வெப் சீரிஸ்க்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் வக்கீல் கேரக்டரில் நடிகர் ஜெய் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். அதனால் கருப்பர் நகரம் படமும் நடிகர் ஜெய்க்கு நல்ல பிரேக் தரும் படமாக இருக்கும் என்று பேசப்படுகிறது.
ஆனால் துரதிஷ்டவசமாக, திடீரென இயக்குநர் கோபி நயினாருக்கும், படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அது பெரிதாகி, மோதல் ஏற்பட்டு, இந்த படத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதிமொழி எழுதி தந்துவிட்டு கோபி நயினார் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. 90 சதவீதம் படம் முழுமையாக முடித்த நிலையில், இன்னும் 10 சதவீத படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது.
இதையடுத்து, மீதமுள்ள 10 சதவீத படத்தை வேறு ஒரு இயக்குநர் மூலம் எடுக்க, தயாரிப்பாளர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கோபி நயினார் இயக்கம் என்பதை இன்னும் அவர்கள் மாற்றவில்லை. ஏனெனில் பிரபலமான இயக்குநர் என்பதால், அவர் பெயரையே இன்னும் விளம்பரத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.





