பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ராம் படம் தோல்வியடைய மூன்றாவதாக கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட்டாகி கார்த்திக்கும் அமீருக்கும் மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. அதேபோல் ப்ரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.
பருத்தீவிரன் படம் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் ரொம்பவே பெரிது. அந்தப் படம் வந்த பிறகுதான் மதுரை, தேனியை சுற்றி படம் எடுக்கலாம் என்ற ட்ரெண்ட பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க அந்தப் படத்திலிருந்துதான் சூர்யாவுக்கும் அமீருக்கும் இடையேயான பேச்சுவார்த்தையும் நின்றுபோனது.
சூழல் இப்படி இருக்க சமீபத்தில் கார்த்தியின் 25ஆவது படமான ஜப்பான் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. ஆனால் அந்த விழாவுக்கு அமீர் வரவில்லை. இதனையடுத்து அவரிடம் ஏன் கலந்துகொள்ளவில்லை என ஒரு பேட்டியில் நெறியாளர் கேட்டபோது என்னை அழைக்கவில்லை அதனால் செல்லவில்லை என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி தனக்கும் சூர்யாவுக்கும் என்ன பிரச்னை என்பது குறித்தும் பல வருடங்களுக்கு பிறகு மௌனம் கலைத்தார்.
அதன்படி, பருத்திவீரன் படத்தை என்னிடமிருந்து மிரட்டி எழுதி வாங்கிவிட்டார்கள். எனக்கும் சூர்யாவுக்கும் இடையே நடந்த பிரச்னைக்கு ஞானவேல்தான் காரணம். அவர்தான் உள்ளே புகுந்து எங்களுக்குள் இருந்த நட்பை கெடுத்துவிட்டார் என்றும் குண்டை தூக்கிப்போட்டார். அமீரின் இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமீரின் இந்தக் கருத்து குறித்து ஞானவேல் ராஜாவிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, “அமீர் ராம் படத்தை தயாரித்தபோது கடனில் சிக்கிவிட்டார். அந்தக் கடனை அடைப்பதற்காக (58 லட்சம் ரூபாய்) நான் வேறு சிலரிடம் கடன் வாங்கி கொடுத்தேன். என்னிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காகத்தான் பருத்திவீரன் படத்தை அவர் இயக்கி கொடுத்தார். அதுமட்டுமின்றி அந்தப் படத்தின் செலவு குறித்து கேட்கையில் இறந்து போன பன்றிகள் இவ்வளவு உயிரோடு இருக்கும் பன்றிகள் என கணக்கு காண்பித்தார்” என்றார்.
இந்நிலையில் ஞானவேல் ராஜாவின் பேச்சுக்கு தற்போது இயக்குநர் அமீர் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், “நன்றி நீ எனது முதுகில் குத்தினாலும் மீண்டும் மீண்டும் நான் உன் எதிரே திமிரோடு நிற்பேன். உன் போல் நடிகர்கள் பின்னால் ஓடி ஒளிந்துகொள்ளமாட்டேன்” என்றார். இதற்கிடையே பருத்திவீரன் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நடந்துகொண்டிருப்பது நினைவுகூரத்தக்கது.





