தமிழ் சினிமாவில் சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் மனித உணர்வுகளுக்கு நெருக்கமான படங்களை தருவதால், இயக்குனர் மாரி செல்வராஜ் போன்றவர்கள், மிக விரைவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். அதை இன்னும் வலுப்படுத்தி அவரது பலமாக மாற்றியிருக்கிறது வாழை படம்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான படம் வாழை. அவர் சிறுவனாக இருந்த போது ஏற்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த படம் பார்த்தவர்கள் அனைவருமே மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக இயக்குனர் பாலா, வாழை படம் பார்த்துவிட்டு வந்து மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். உணர்ச்சிவசப்பட்ட மாரி செல்வராஜை அருகில் அமர வைத்து, கைகளை பிடித்து ஆறுதல் சொல்லி ஆசுவாசப்படுத்தினார். நடிகர் சூரி வாழை படத்தை பார்த்துவிட்டு, மாரி செல்வராஜூக்கு 10க்கும் மேற்பட்ட முத்தங்களை பரிசளித்தார்.
நடிகர்கள் தனுஷ், கார்த்தி, இயக்குனர்கள் மிஷ்கின், ராம் உள்ளிட்ட பலரும் வாழை படத்தை வெகுவாக பாராட்டி உள்ளனர். இந்த படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்ட முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். எனது லட்சிய படமான வாழை படத்தை எடுக்கவே நான் சினிமாவுக்குள் வந்தேன் என்று கூறியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
இந்நிலையில் வாழை படம் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயனும், வாழை பட இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், மிகவும் நெருக்கமான ஒருவரின் கதையை கேட்பது போல் ஒரு உணர்வை இந்த படம் ஏற்படுத்தியது. தான் ஒரு வலுவான இயக்குனர் என்பதை மாரி செல்வராஜ் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.
வாழை எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு படமாக மாறி இருக்கிறது. பல விருதுகளை வெல்ல தகுதியான ஒரு படம் வாழை என்று, அந்த பதிவில் பாராட்டி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ஆனால் அவரது தயாரிப்பில் நேற்று வெளிவந்துள்ள கொட்டுக்காளி படம், விருதுகளுக்கு தகுதியற்ற ஒரு சாதாரண படம் என்ற விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





