நடிகை குஷ்பு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 1990களில் இருந்தவர். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்த அவர், சினிமா தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். சினிமா, டிவி சீரியல்களை தயாரிக்கிறார். இதுதவிர அரசியல் களத்திலும் குஷ்பு இருந்து வருகிறார். இப்போது பாஜகவில் உள்ள குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக உள்ளார்.
சமீபத்தில், திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில், குஷ்பு இதற்காக கடுமையான கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் பரிந்துரை செய்து, மன்சூர் அலிகான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று குஷ்பு கூறிய நிலையில், இப்போது மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் இவ்வளவு ஆவேசப்பட்டு உடனடி நடவடிக்கை எடுத்த குஷ்பு, மணிப்பூரில் அவ்வளவு பிரச்னைகள் நடந்த போதும், பெண்கள் அவமதிக்கப்பட்ட போதும் நடவடிக்கை எடுக்காதது ஏன், என்று திமுக ஆதரவாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த குஷ்பு, சேரி மொழியில் என்னால் பதில் சொல்ல முடியாது என கூறியிருந்தார். இப்படி குஷ்பு நக்கலாக பதில் அளித்தது சரியல்ல, என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. திரிஷா விஷயத்தில் அக்கறை காட்டிய நீங்கள் மணிப்பூர் சம்பவங்களில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற நியாயமான கேள்விக்கு அவர் பதில் அளிக்காமல், இப்படி பேசியது தவறு என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சேரி மொழியில் பதிலளிக்க மாட்டேன் என்ற குஷ்புவின் பதில், சேரி மக்களையும் அவமதிக்கும் வகையில் இருக்கிறது. மேலும் நியாயமான கேள்விக்கு பதில் தராமல், இதிலும் குஷ்பு அரசியல் செய்கிறாரே என்ற குற்றச்சாட்டும் கிளம்பியிருக்கிறது. இந்த பிரச்னை இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு பதிலளித்துள்ள குஷ்பு, பட்டியல் இன மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் நான் முன்னால் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்பதற்கு அன்பு என்பதுதான் பொருள். அன்பு என்ற பொருளில்தான் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் என்று விளக்கம் அளித்துள்ளார். இவருக்கு நூறு மொழி தெரியும். அதற்காக இவர் பேசுவதற்கு எல்லாம் விளக்கம் தேடிக் கொண்டிருக்க வேண்டுமா எனவும் நெட்டிசன்கள் பதிலளித்து வருகின்றனர்.





