நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புஷ்பா 2 படம் நேற்று வெளியானது. ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு பாடல்களுக்கு மட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணிை இசையை சாம் சிஎஸ் அமைத்துள்ளார். படத்தை சுகுமாறன் இயக்கியுள்ளார்.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. புஷ்பா 1 படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டிருந்தார். புஷ்பா 2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.
புஷ்பா 2 படம் வெளியான நேற்று முதல்நாளில் உலகம் முழுவதும் மொத்தம் 12 ஆயிரம் தியேட்டர்களில் படம் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் 800 திரைகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அதே போல் ஐமேக்ஸ் திரைகளிலும் இந்த படம் வெளியாகி உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள், வேற லெவல் என்று பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், 2ம் பாகம் சொதப்பிவிடும். ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு படத்தில் கன்டென்ட் இருக்காது. கதை, திரைக்கதை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போய் 2ம் பாகமாக வந்த பல படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2 போன்றவை உதாரணமாக சொல்லலாம்.
ஆனால் புஷ்பா 2 படம் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படத்திலும் அல்லு அர்ஜூன் நடிப்பு தேசிய விருதை பெறும் அளவுக்கு சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ராஷ்மிகா நடிப்பில் மிரட்டி உள்ளார். பகத் பாசிலும் அசத்தி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.
புஷ்பா 2 படம் வெளியான முதல் நாளில் நேற்று உலகம் முழுவதும் ரூ. 275 கோடி வசூலித்துள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை எந்த படமும் இந்த அளவுக்கு வசூலித்தது இல்லை. இந்தியில் மட்டும் புஷ்பா 2 முதல் நாளில் ரூ.67.5 கோடி வசூலித்துளளது. ஜவான் 64 கோடி ரூபாய், கேஜிஎப் 52 கோடியை மட்டுமே இந்தியில் முதல் நாளில் வசூலித்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் புஷ்பா 2 மொத்தம் 8.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.





