நடிகர் விஜய், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள போவதாக ஒரு தகவல் பலமாக அடிபடுகிறது. லியோ படத்தின் சக்சஸ் மீட்டிலும் கப்பு முக்கியம் பிகிலு என, மறைமுகமாக தனது விருப்பத்தை விஜய் தெரிவித்து விட்டார்.
தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதன் அமைப்பு சார்ந்த வக்கீல் அணி உள்பட நிர்வாகிகள் வாரியாக தனித்தனி கூட்டங்கள் நடத்துவது, மண்டல, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பேசுவது, மாநில தலைவர் புஸ்லி ஆனந்த் மூலம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவரங்கள் திரட்டும் பணிகளை விஜய் மறைமுகமாக செய்து வருகிறார்.
தமிழ் சினிமா துறையினரில் பலரும் விஜய் அரசியலுக்கு வருவதை விரும்பாவிட்டாலும் ஒரு தரப்பினர், அவர்தான் வரட்டுமே, திராவிட கட்சிகளே மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்வதால், விஜய் ஒருமுறை முதல்வர்தான் ஆகட்டுமே என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரடக்சன் தயாரிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார். முதல் படமே 10 மொழிகளில் வெளியாவதாக தகவல் வந்துள்ளது. இந்த விஷயத்தில் விஜய் தரப்பில் இருந்து எந்தவிதமான ஒத்துழைப்பும், ஆதரவும் இல்லாத நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தனது அம்மா சங்கீதாவின் ஆதரவால் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றதாகவும் தகவல் பரவி வருகிறது.
இதற்கிடையே படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்பு, கடந்த அக்டோபர் மாதமே திரைக்கதை (ஸ்கிரிப்ட்) ரெடி செய்து விடுவதாக, ஜேசன் சஞ்சய் கூறியிருக்கிறார். ஆனால் இப்போது டிசம்பர் மாதத்தில் தான் ஸ்கிரிப்ட் ரெடியாகும் என ஜேசன் சஞ்சய் கூறியுள்ளார். ஏன் இரண்டு மாதம் தாமதப்படுத்துகிறார் என விசாரித்ததில் ஒரு அதிர்ச்சியான உண்மை வெளிவந்திருக்கிறது.
அதாவது, விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு தமிழில் எழுத, படிக்க தெரியாதாம். அதனால் ஸ்கிரிப்ட் முழுக்க ஆங்கிலத்தில் எழுதி விட்டாராம். அதனால் அந்த ஸ்கிரிப்ட்டை தமிழில் மொழிபெயர்க்க இரண்டு மாதம் அவகாசம் கேட்டிருக்கிறார். இனி ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி தமிழில் படத்தை எடுக்கப் போகிறார் என குழப்பம் ஏற்பட்டுள்ளது. தன் மகனுக்கு தமிழில் எழுத படிக்க தெரியாது என்பதை கூட அறியாமல் விஜய் எப்படி கோட்டை விட்டார் என்பதுதான் அவரது ரசிகர்களின் ஆச்சரியமாக உள்ளது.





