நடிகை வனிதா விஜயகுமார், தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார். பிரபல நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள். இவர் ஏற்கனவே, விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இப்போது அவரது மகள் ஜோவிகா பங்கேற்று இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தினமும் ரிவ்யூ தருகிறார் வனிதா விஜயகுமார்.
இந்நிலையில், அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தன்னை ஒரு மர்ம நபர் தாக்கியதாக, காயம்பட்ட முகத்துடன் புகைப்படம் பதிவிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டு வரும் இன்றைய சூழலில், மிக பிரபலமான நடிகையான இவர் தாக்கப்பட்டது பேசு பொருளாக மாறியிருக்கிறது.
அந்த பதிவில் வனிதா விஜயகுமார் கூறியிருப்பதாவது, நான் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த எனது விமர்சனத்தை முடித்துவிட்டு, இரவு உணவை சாப்பிட்டுவிட்டு காரில் வீட்டுக்கு வந்த நான், காரை விட்டு இறங்கி நடந்து சென்று கொண்டு இருந்தேன். காரை எனது சகோதரி சவுமியா வீட்டின் அருகே இருட்டான பகுதியில் நிறுத்திவிட்டு நடந்தேன்.
அப்போது, எங்கிருந்தோ திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபர், என்னை பார்த்து பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கறீங்களா என கேட்டார். அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றியா என கேட்டு, என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடி விட்டார். இதனால் கன்னத்தில் இருந்து எனக்கு ரத்தம் வழிந்தது. நள்ளிரவு ஒரு மணி என்பதால், அங்கு யாரும் பக்கத்தில் இல்லை.
என் சகோதரியை கீழே வரும்படி அழைத்தேன். அவர் போலீசில் புகார் தரும்படி என்னிடம் கூறினார். அவரிடம் நான், போலீசில் புகார் தெரிவிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டேன். காயத்துக்கு முதலுதவி செய்துவிட்டு, என்னை தாக்கிய நபரை சிறிது தூரம் தேடினேன். ஆனால் ஆளை பிடிக்க முடியவில்லை.
அந்த நபர், பைத்தியக்காரத்தனமாக சிரித்தது இன்னும் என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. நான் திரையில் தோன்றி பேசும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால், ஓய்வு எடுத்துக்கொள்கிறேன் என, அதில் வனிதா விஜயகுமார் கூறியிருக்கிறார். பிரபல நடிகையான வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





