முன்பெல்லாம் ஒரு ஹீரோ ரசிகர்களிடம் தெரிவதற்கு பல படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும். பல நல்ல வெற்றிப் படங்களை கொடுத்து நல்ல கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர வேண்டும். நடிகர் மட்டுமின்றி படத்தின் இயக்குனருக்கும் அதுதான் நிலமை தான். ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டால் இயக்குனரை கொண்டாடி விட மாட்டார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு ஹிட் படம் கொடுத்து விட்டாலே அந்த இயக்குனர்தான் தமிழ் சினிமாவை காக்க வந்த அவதார புருஷன் போல புகழ் பாட ஆரம்பித்து விடுகின்றனர். ஒரு ஹிட் கொடுத்த ஹீரோ தான் இனி தமிழ் சினிமாவின் வரலாற்றையே மாற்றி எழுதப் போகிறார் என்பது போல வாழ்த்து மழை பொழிய துவங்கி விடுகின்றனர்.
அப்படி தான் லோகேஷ் கனகராஜ் பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து அருண் மாதேஸ்வரன் போன்ற இயக்குனர்களை நடிகர்களை தமிழ் சினிமாவில் கொண்டாடுகின்றனர். அதே போல் ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டால் அந்த டைரக்டருக்கும், அந்த ஹீரோவுக்கும் தலையில் கொம்பு முளைக்காத குறைதான். சினிமா குறித்து பெரிய ஞானிகளாக மாறி சினிமாவுக்கே புத்தி சொல்கின்றனர்.
நேர்காணல் என்ற பெயரில் யூடியூப் சேனல்களில் தமிழ் சினிமாவையே வரையறுக்க வந்த கலைக்கூட சிற்பிகள் போல பேச ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் ரஜினி கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களும் பாரதிராஜா பாக்யராஜ் பாலு மகேந்திரா கே பாலசந்தர் போன்றவர்கள் எல்லாம் எப்போதுமே அமைதியாக தான் இருந்து நல்ல சினிமாவை தந்திருக்கின்றனர்.
இதுகுறித்து சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது கூறியதாவது, எனக்கு இப்போ நிறைய பேரை பார்த்தா சிரிப்பா வரும். ஒரு படம் பண்ணிட்டு சினிமா என்னான்னு பேச ஆரம்பிச்சுடறாங்க. டேய் பாலச்சந்தர் பாரதிராஜா அவர்களுடைய படங்களை எல்லாம் நாம நினைச்சுக் கூட பார்க்க முடியாது, அந்த அளவுக்கு அவங்க படங்கள் இருக்கும்.
அவங்களே இவ்வளவு பண்ணிட்டு அடக்கமாக இருக்காங்க. நீங்க எல்லாம் ஏன்டா இப்படி ஒரு படம் எடுத்துட்டு ஆடுறீங்கன்னு கேட்க தோணும். நமக்கு அது வேணாம். படம் நல்லா இருந்தால் ஓடப்போகுது. ரொம்ப பேசாதீங்க என்று அட்வைஸ் பண்ணத் தோணும் என்று இயக்குனர் சுந்தர் சி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





