தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தியாகராஜ பாகவர்தான். அவரை சூப்பர் ஸ்டார் என்று யாரும் பட்டம் தந்து அழைக்காவிட்டாலும், புகழின் உச்சத்தில், வசூலின் உச்சத்தில் இருந்த அவரை தான் சூப்பர் ஸ்டாராக தமிழ் திரையுலகமும், ரசிகர்களும் பார்த்தனர். ஆனால் கடைசியில் வறுமையில் சிக்கி, நோய்வாய்ப்பட்டு கவனிப்பாரின்றி இறந்தவர்தான் தியாகராஜ பாகவர் என்பது கவலைக்குரியது.
அதற்கு பின்னர் எம்ஜிஆர், சிவாஜி என்ற இரண்டு மிகப் பெரிய ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சியும் அவர்களை மக்கள் திலகம், நடிகர் திலகம் என்ற அடையாளங்களை வைத்துதான் அழைக்கப்பட்டனர்.சூப்பர் ஸ்டார்கள் என அவர்கள் அழைக்கப்படவில்லை என்றாலும், அவர்களும் சூப்பர் ஸ்டார்களாக தான் ரசிகர்கள் அவர்களை ரசித்தனர்.
தொடர்ந்து ரஜினி, கமல் சினிமா காலம் துவங்கிய பின்பு ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அளித்தனர் இயக்குநர் கலைஞானம். இது நம்ம ஆளு படத்தில், பிராமணர் வேடத்தில் பாக்யராஜை சுண்டல் விற்க அனுப்பும் பிராமணர் கேரக்டரில் நடித்தவர் இவர்தான். பைரவி என்ற படத்தை இயக்கிய அவர், முதலில் ரஜினியை ஹீரோவாக்கியவர் அவர்.
தமிழ் சினிமாவில் அப்போதும் சிவாஜி, கமல் உச்ச நட்சத்திரங்களாக இருந்த நிலையில், இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை மறுத்தவர்தான் ரஜினிகாந்த். எனினும் நாளடைவில் அந்த பட்டத்துக்கு பொருத்தமானவர் ரஜினிகாந்த் மட்டுமே என பாராட்டும் அளவுக்கு தமிழ் சினிமாவில் பல உயரங்களை தொட்டவர். இன்றும் 72 வயதில் ஹீரோவாக நடித்து, அலப்பரை கிளப்பிக் கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், விஜய் சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்து, வாரிசு பட விழாவில் கொளுத்தப் போட்ட சிலரால், பிரச்னை விவகாரமானது. இதில் ரஜினி சொன்ன காக்கா -கழுகு கதை இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது. லியோ சக்சஸ் மீட் விழாவில், சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான் என்று விஜயே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இந்த விவகாரம் ஓய்ந்த நிலையில் வெளியான அன்னபூரணி டீசரில், பஸ் கண்டக்டர் எல்லாருமே சூப்பர் ஸ்டார் ஆகறது இல்ல என, நயன்தாராவின் அம்மா சொல்ல, பிடிச்சத செஞ்சா எல்லாருமே சூப்பர் ஸ்டார் ஆகலாம் என நயன்தாரா சொல்லி இருக்கிறார். அதை ப்ளூ சட்டை மாறன், ஆண் சூப்பர் ஸ்டாரை பற்றி தான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பேசி இருக்கிறாரா என கலாய்த்து, இருக்கிறார். அதே வேளையில், லேடி சூப்பர் ஸ்டாருக்கு எதுக்கு இந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.





