உலக சினிமாவில் ஆங்கில படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஹாலிவுட் படங்களில் அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு தனித்துவமான அடையாளம் பெற்றவர் நடிகர் ஜாக்கிசான். தனது சாகசமான சண்டை காட்சிகள் விறுவிறுப்பான சேஸிங் காட்சிகள் மற்றும் காமெடி கலந்த நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களை ஜாக்கிசான் கவர்ந்தவர்.
கராத்தே நாயகன் புரூஸ் லீ மறைவுக்கு பிறகு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய ஆசிய நடிகர்களில் முக்கியமானவர் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடித்த ஏராளமான ஆங்கில படங்கள் தமிழில் டப் செய்து வெளியாகி தமிழ்நாட்டிலும் பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன.
குறிப்பாக 1985 ஹூ ஏம் ஐ போலீஸ் ஸ்டோரி ரஷ் ஹவர் டிரங்கன் மாஸ்டர் கராத்தே ஹிட் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் ஜாக்கிசான். ஆங்கிலத்தில் உருவாகி பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட அவரது படங்கள் மூலம் உலகளாவிய புகழையும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெற்றிருக்கிறார்.
தற்போது 71 வயதான நிலையில் உள்ள ஜாக்கிசான் அவரது மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தனது இறுதிச் சடங்கில் ஒலிக்க வேண்டிய பிரத்தியேக பாடல் ஒன்றை ரகசியமாக பதிவு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த பாடல் தனது வாழ்க்கை பயணத்தையும் உலக மக்களுக்கு சொல்ல விரும்பும் இறுதி செய்தியையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மேலும் தனது இறுதி அஞ்சலி நிகழ்வில் அந்த பாடல் கட்டாயம் ஒலிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலரது மறைவு நடிகர் ஜாக்கிசானை ஆழமாக பாதித்துள்ளதாக தெரிகிறது. அந்த அனுபவங்கள் வாழ்க்கை மற்றும் மரணம் குறித்து முன்கூட்டியே சிந்திக்க அவரை தூண்டியதாகவும் அதன்பிறகு தனது இறுதிச் சடங்குக்கான பாடலை பதிவு செய்யும் முடிவை ஜாக்கிசான் எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து ஜாக்கிசானின் ரசிகர்கள் பலரும் உணர்ச்சி பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.





