கேரளாவில் மலையாள சினிமா நடிகர் நடிகைகளின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் சங்கம் அம்மா. இந்த சங்கத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக நிர்வாகம் நிதி முறைகேடு மற்றும் அரசியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
இந்த நிலையில் சங்கத்தின் முன்னாள் தலைவர் நடிகை ஸ்வேதா மேனன் மீது புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் மலையாள சினிமாத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் நிதி முறைகேடு புகார் எதிரொலியாக தலைவர் ஸ்வேதா மேனன் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பேர் கொண்ட அம்மா நிர்வாக குழு ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தது.
இதையடுத்து தற்காலிக பொதுக்குழு நியமிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கத்தின் தலைவர் ஸ்வேதா மேனன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனால் அந்த தற்காலிக குழுவின் செயல்பாட்டுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையே நடிகைகள் ஹன்சிபா உஷா ஹசீனா உள்ளிட்டோர் ஸ்வேதா மேனன் மற்றும் நடிகை லட்சுமி பிரியா மீது புதிய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
அவர்கள் மத ரீதியான கருத்துக்களை பயன்படுத்தியதாகவும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் அவர்கள் மீது நடிகைகள் ஹன்சிபா உஷா ஹசீனா குற்றம் சாட்டினர். இந்த விவகாரத்தில் நடிகை மாலாபாரதி, ஸ்வேதா மேனன் தொடர்ந்து அம்மா அமைப்பின் தலைவராக இருந்தால் அதானி குழுமம் 15 கோடி ரூபாய் நன்கொடை வழங்கும் வாய்ப்பு குறித்து பாஜக தலைவர் பத்மஜா மேனன் பேசியதாக கூறப்படும் ஒரு வீடியோவை வெளியிட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த நடிகை ஸ்வேதா மேனன் கூறியதாவது, முன்னாள் நிர்வாகிகளின் முறைகேடுகள் குறித்து நான் பேசிய பிறகுதான் என் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் கோவில் தேவாலயம் அம்பானி அல்லது அதானி என யாரிடமிருந்து நிதி பெறுகிறது என்பதை நாங்கள் ஒருபோதும் பார்க்கவில்லை. உதவி செய்ய முன்வருபவர்களின் ஆதரவை மட்டுமே ஏற்றுக்கொண்டோம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எஸ் சுரேஷ் கூறுகையில், ஸ்வேதா மேனன் ஒரு தேசியவாதி. பிரதமர் நரேந்திர மோடியின் மீது மரியாதை கொண்டவர். ஆனால் அவர் பாஜக உறுப்பினர் அல்ல. திரைப்படத்துறையின் அமைப்புகளை அரசியலுடன் இணைத்து பார்க்க கூடாது என்று கூறியிருக்கிறார். இதனால் கேரளா திரைப்பட நடிகர் சங்கமான அம்மாவின் நிர்வாகம் மற்றும் அரசியல் சர்ச்சைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.





