தோண்ட தோண்ட வரும் பூதம் போல, பருத்திவீரன் பஞ்சாயத்து அடுத்தடுத்து கிளம்பிக்கொண்டே இருக்கிறது. ஜப்பான் பட விழாவில் ஆரம்பித்த பிரச்னை, மீண்டும் ஜப்பான் பட விழாவுக்கே இப்போது திரும்பியிருப்பது, மிகவும் ஆச்சரியமான ஒன்றாகவே இருக்கிறது. அந்த விழாவில் கார்த்தி பேசியது, இப்போது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஜப்பான் பட விழாவில், கார்த்தி நடித்த முதல் படத்தின் இயக்குநராக நீங்கள் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு, பருத்தி வீரன் படம் வந்து, 17 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் தயாரிப்பு சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடக்கிறது என்ற பதிலை மட்டுமே இயக்குநர் அமீர் சொன்னார். மேலும் முறைப்படி அவர்கள் தரப்பில் இருந்து என்னை அழைக்கவும் இல்லை என்பதையும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் அமீரை தரக்குறைவாக விமர்சித்தார். இதற்கு இயக்குநர்கள் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிக்குமார், கரு பழனியப்பன், சேரன், கவிஞர் சிநேகன் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இயக்குநர் அமீர் என்ற படைப்பாளியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை என்றும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த பிரச்னையில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி என யாருமே வாய்திறக்காமல் மவுனம் சாதிப்பது, ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி திரைத்துறையினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரு பழனியப்பன், சிவக்குமார் ஏன், ஞானவேல் ராஜாவை கண்டிக்காமல் இருக்கிறார் என்று கேட்ட பிறகு, சிவக்குமார் அறிவுறுத்தலின் படி வருத்தம் தெரிவித்தார் ஞானவேல் ராஜா.
இப்போது, ஜப்பான் படவிழாவில் கார்த்தி பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பருத்தி வீரன் படத்தில் என்னை நடிக்க வைத்ததே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான். பருத்திவீரன் படம் ரிலீஸ் ஆவதே அப்போது பெரும் பிரச்னையாக இருந்தது. 3 முறை ரிலீஸ் தள்ளிப் போனது. அப்போது அண்ணன் சூர்யா தான், அவரோட மொத்த சேமிப்பு பணத்தையும் கொடுத்து பருத்தி வீரன் ரிலீஸ் ஆக உதவினார், என்றார்.
ஒரு மாதம் மட்டுமே பருத்திவீரன் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஞானவேல் ராஜா, தயாரிப்பில் இருந்து விலகி விட்டார். அதற்கு பிறகு படப்பிடிப்புக்கான மொத்த பணத்தையும் கடனாக பலரிடம் வாங்கி தான், படத்தை முடித்திருக்கிறார் அமீர். இதை சமுத்திரக்கனி தெளிவாக கூறியிருக்கிறார். 17 ஆண்டுகளாக, இன்னும் அந்த படத்தில் நடித்தவர்களுக்கு, படக்குழுவில் இருந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் தரவில்லை. தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அமீருக்கும் பணம் தரவில்லை. இந்நிலையில், சூர்யா மொத்த சேமிப்பு பணத்தையும் யாருக்கு கொடுத்தார், ஏன் இப்படி கார்த்தி பொய் பேசுகிறார் என்ற கேள்வியுடன் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.





