தமிழ் சினிமாவில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி என்ற படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான கார்பரேட் நிறுவனம் லைகா புரடக்சன்ஸ். இதன் தயாரிப்பாளர் சுபாஸ்கரன். தமிழில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இந்த நிறுவனம் தயாரித்தது. பெரிய அளவில் லாபமும் சம்பாதித்தது.
ஆனால் ஒரு கட்டத்தில் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்த பல படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. இதனால் பலமடங்கு நஷ்டத்தை இந்த நிறுவனம் சந்தித்தது. குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த தர்பார் லால் சலாம் கமல் நடித்த இந்தியன் 2 அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 சிம்பு நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 என பல படங்கள் பெரிய நஷ்டத்தை லைகா நிறுவனத்துக்கு ஏற்படுத்தியது.
இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே லைகா புரடக்சன்ஸ் விரைவில் மூடுவிழா காணப் போகிறது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்தை தயாரிக்கும் லைகா புரடக்சன்ஸ் அத்துடன் தனது தயாரிப்பு பணிகளை நிறுத்திக்கொள்ளப் போகிறது என்றெல்லாம் தகவல்கள் பரவ ஆரம்பித்தன.
இந்நிலையில் லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர், இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு பெரிய படத்தை தங்களது நிறுவனத்தின் மூலம் வெளியிட ஆசைப்பட்டு இருக்கிறார். அதுவும் உடனே நடக்க வேண்டும் என்பதால் தற்போது கைவசம் உள்ள இந்தியன் 3 படத்தையே லைகா புரடக்சன்ஸ் சார்பில் வெளியிட முடிவு செய்து, அந்த படத்தை காணவும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
இதுவரை எடுக்கப்பட்ட வரைக்கும் இந்தியன் 3 படத்தை நடிகர் கமல் பார்த்திருக்கிறார். ரெட்ஜெயின்ட் மூவிஸ் சார்பில் அவர்களும் பார்த்திருக்கின்றனர். ஆனால் படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பார்க்க மட்டும் இயக்குனர் ஷங்கர் நோ சொல்லி இருக்கிறார்.
இதற்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை லைகா புரடக்சன்ஸ் தயாரித்தது. அப்போது படத்தின் சில முக்கிய காட்சிகளை சுபாஸ்கரன் பார்க்க வேண்டும் என இயக்குனர் ஷங்கர் அனுப்பி வைக்க, அதைப் பார்த்து ரசித்த சுபாஸ்கரன், தன் நண்பர் ஒருவருக்கு அதை அனுப்ப அவர் மற்ற ஒருவருக்கு அனுப்ப என கடைசியில் இணையத்தில் அந்த காட்சி வரும் அளவுக்கு நிலமை மோசமாகி விட்டது. அந்த கசப்பான அனுபவத்தில்தான் ஷங்கர் முதலில் இதற்கு மறுத்துள்ளார். பிறகு இந்தியன் 3 படம் வெளிவர வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்தியன் 3 படக்காட்சிகளை சுபாஸ்கரனுக்கு, லைகா நிர்வாகி தமிழ்குமரன் மூலமாக ஷங்கர் கொடுத்து அனுப்பியிருப்பதாக தெரிய வந்துள்ளது.





