ஜெயிலர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் வெளியானது. ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கியிருந்த இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. இன்னும் இது ஓடிடி தளத்தில் வெளியாகவில்லை.
வரும் நாட்களில் கட் செய்யப்பட்ட காட்சிகளுடன் சேர்த்து, லால் சலாம் திரைப்படம் வெளியாகும் என்று அதன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான வேட்டையன் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பிய ஞானவேல் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தில் கடைபிடிக்கப்பட்ட ஃபார்முலாவை தான் இதிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதாவது தமிழ் திரையுலகை தாண்டி, பிற மாநிலங்களில் இருந்தும் முக்கிய நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
அதன்படி பாலிவுட் உலகில் இருந்து அமிதாப்பச்சன் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் இருந்து ராணா, மலையாள உலகில் இருந்து பகத் பாசில் மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கின்றனர். ரித்திகா துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் படத்தில் உள்ளார்கள்.
கல்வித்துறையில் நடைபெறும் ஊழலை, வேட்டையன் திரைப்படம் வெளிச்சம் போட்டு காட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையில் அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து மனசிலாயோ பாடல் வெளியானது.
மஞ்சு வாரியரின் உற்சாக நடனத்தில் வெளியான இந்த திரைப்பட பாடல், மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. ட்ரெண்டிங்கில் இப்போதும் நம்பர் ஒன்னாக இருக்கிறது. இப்படியான சூழலில், படத்திலிருந்து முக்கிய நட்சத்திரங்களின் கதாபாத்திரத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, சரண்யா என்னும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக நடித்திருக்கிறார் துஷாரா விஜயன். போலீஸ் அதிகாரியாக ரூபா என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார் ரித்திகா சிங். ரஜினியின் மனைவியாக தாரா என்னும் கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது.





